ரூபே கார்டு அறிமுகம் செய்ய ஒப்பந்தம்: சவுதி அரேபியா பயணம் முடித்து பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்


ரூபே கார்டு அறிமுகம் செய்ய ஒப்பந்தம்: சவுதி அரேபியா பயணம் முடித்து பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்
x
தினத்தந்தி 30 Oct 2019 11:30 PM GMT (Updated: 30 Oct 2019 11:21 PM GMT)

பிரதமர் மோடி, சவுதி அரேபியா பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார். அவர் சவுதி அரேபியாவில் ரூபே கார்டை அறிமுகம் செய்வது உள்பட முக்கிய ஒப்பந்தங்களை செய்துள்ளார்.

ரியாத்,

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சவுதி அரேபியா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டின் மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரை சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடியை அந்த நாட்டின் எரிசக்தி மந்திரி அப்துல் அஜிஸ் பின் சல்மான் அல் சாவுத், தொழிலாளர் நலத்துறை மந்திரி அகமது பின் சுலைமான் அல்ராஜ்ஹி, நீர், விவசாய மந்திரி அப்துல் ரகுமான் பின் அப்துல் மொஹ்சின் அல் பாத்லே ஆகியோர் சந்தித்து, இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக விவாதித்தனர்.

பிரதமர் மோடியின் சவுதி அரேபியா பயணத்தின்போது நேற்றுமுன்தினம் 12 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அதில் முக்கியமான ஒன்று, சவுதி அரேபியாவில் இந்தியாவின் ரூபே கார்டை அறிமுகம் செய்வதற்கான ஒப்பந்தமும் அடங்கும். ரூபே கார்டு, விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளுக்கு மாற்றாக அமைந்துள்ளது.

இந்த ரூபே கார்டை இனி சவுதி அரேபியாவிலும் பயன்படுத்தலாம்.

இதன்மூலம் பாரசீக வளைகுடா பகுதியில் இந்த கார்டு பயன்பாட்டுக்கு வருகிற மூன்றாவது நாடு, சவுதி அரேபியா ஆகும். ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன் நாடுகளில் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி, சவுதி அரேபியா நடத்திய நிதி மாநாட்டிலும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மோதல்களுக்கு தீர்வு காண்பதற்கான உலகளாவிய அமைப்பாக ஐ.நா. சபையை பயன்படுத்துவதற்கு பதிலாக இதை ஒரு கருவியாக, பலம் வாய்ந்த சில நாடுகள் பயன்படுத்துவதாக அவர் வருத்தம் வெளியிட்டார்.

இந்தியாவில் வளர்ந்து வரும் எரிசக்தி தேவையை சந்திக்கும் வகையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7 லட்சம் கோடி) முதலீடு செய்யப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து 2 நாள் சவுதி அரேபியா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.

இதையொட்டி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “இந்தியா, சவுதி அரேபியா இரு தரப்பு உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன் பிரதமர் மோடி ரியாத்தில் இருந்து புறப்படுகிறார்” என குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடி நேற்று டெல்லி திரும்பினார்.


Next Story