கர்தார்பூர் தொடர்பாக பாக். வெளியிட்ட வீடியோவில் காலிஸ்தான் பிரிவினைவாதி படம் இடம் பெற்றதால் சர்ச்சை


கர்தார்பூர் தொடர்பாக பாக். வெளியிட்ட வீடியோவில் காலிஸ்தான் பிரிவினைவாதி படம் இடம் பெற்றதால் சர்ச்சை
x
தினத்தந்தி 6 Nov 2019 10:19 AM GMT (Updated: 6 Nov 2019 10:19 AM GMT)

கர்தார்பூர் வழித்தடம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோவில் காலிஸ்தான் பிரிவினைவாதி படம் இடம் பெற்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் தன் வாழ்நாளில் 18 ஆண்டுகளை பாகிஸ்தானின் தற்போதைய நரோவால் மாவட்டத்தில் உள்ள கர்தார்பூரில் கழித்துள்ளார். கர்தார்பூரில் ராவி நதிக்கரையோரம் உள்ள குருத்வாராவிற்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். 

கர்தார்பூரையும் இந்தியாவின் குருதாஸ்பூரில் உள்ள தேராபாபா நானக்கையும் இணைக்கும் கர்தார்பூர் வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8- ஆம் தேதி இந்தியத் தரப்பில் நடைபாதையைத் திறக்கவுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மறுநாள் வழியைத் திறப்பார்.

குருத்வாராவிற்கு வருகை தரும் சீக்கிய யாத்ரீகர்களை வரவேற்கும் வகையில் பாகிஸ்தான் அரசு வெளியிட்ட வீடியோ பாடல் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. வீடியோ பாடலின் ஒரு பகுதியில் பின்னணியில பிந்ரன்வாலே உட்பட மூன்று காலிஸ்தானிய பிரிவினைவாதத் தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன. 4  நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் ”காலிஸ்தான் 2020” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோவில், ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே, மேஜர் ஜெனரல் ஷான்பேக் சிங் மற்றும் அம்ரிக் சிங் கல்சா ஆகியோரின் சுவரொட்டிகள் உள்ளன. இவர்கள் அனைவரும் 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமிர்தசரஸ் பொற்கோயிலில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரின் போது கொல்லப்பட்டவர்கள்.

Next Story