சிலி நாட்டில் போராட்டம்; அர்ஜென்டினா மக்கள் ஆதரவு


சிலி நாட்டில் போராட்டம்; அர்ஜென்டினா மக்கள் ஆதரவு
x
தினத்தந்தி 7 Nov 2019 3:21 AM GMT (Updated: 7 Nov 2019 3:21 AM GMT)

சிலி நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அர்ஜென்டினாவில் மக்கள் பேரணி நடத்தினர்.

சான்டியாகோ,

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் கடந்த சில மாதங்களாக சுகாதாரம், கல்வி மற்றும் பொது சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பேருந்து, மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது.

எரிபொருட்கள் விலை உயர்வு மற்றும் அந்நாட்டு நாணயமான பீசோவின் மதிப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு விளக்கம் அளித்தது. ஆனால் இந்த கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததால் அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு ரத்து செய்யப்படுவதாக அதிபர் செபாஸ்டியன் பினெரா அறிவித்தார். 

இருப்பினும் நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சீர் செய்யவும், அதிபர் செபாஸ்டியன் பினெரா பதவி விலக வலியுறுத்தியும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே சிலி நாட்டு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அர்ஜென்டினாவில் பேரணி நடத்தப்பட்டது. அர்ஜென்டினாவின் பியுனெஸ் அயர்ஸ் நகரின் மைய பகுதியில் பதாகைகளுடன் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் டிரம்ஸ் உள்ளிட்ட இசை வாத்தியங்களை இசைத்தபடி சாலைகளில் பேரணியாக சென்று சிலி நாட்டு மக்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

Next Story