வியட்நாமில் வினோதம்: செத்த பாம்பை கயிறாக்கி ‘ஸ்கிப்பிங்’ விளையாடிய சிறுவர்கள்


வியட்நாமில் வினோதம்: செத்த பாம்பை கயிறாக்கி ‘ஸ்கிப்பிங்’ விளையாடிய சிறுவர்கள்
x
தினத்தந்தி 17 Nov 2019 10:43 PM GMT (Updated: 17 Nov 2019 10:43 PM GMT)

வியட்நாமில் செத்த பாம்பை கயிறாக்கி சிறுவர்கள் ‘ஸ்கிப்பிங்’ விளையாடிய வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹனோய்,

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதிலும் சிலர் பாம்பு உயிரோடு இருந்தால் மட்டும் அல்ல செத்து கிடந்தால் கூட அதன் அருகில் செல்ல பயப்படுவார்கள். ஆனால் வியட்நாமில் இறந்த பாம்பை வைத்து சிறுவர்கள் ‘ஸ்கிப்பிங்’ விளையாடிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வியட்நாமின் வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தில் சிறுவர்கள் சிலர் விளையாடுவதற்கு ஏதும் கிடைக்காமல் சுற்றித்திரிந்தனர். அப்போது அங்கு பாம்பு ஒன்று செத்து கிடந்ததை கண்டனர். செத்த பாம்பை கண்டு, அந்த சிறுவர்கள் பதற்றம் அடையவில்லை. மாறாக தங்களுக்கு விளையாட அருமையான பொருள் கிடைத்து விட்டதென்று உற்சாகமடைந்தனர்.

செத்த பாம்பை கையில் எடுத்த அவர்கள், கயிறுக்கு பதிலாக பாம்பின் உடலை கொண்டு ‘ஸ்கிப்பிங்’ விளையாட முடிவு செய்தனர். அதன்படி இறந்த பாம்பின் உடலை ஒரு சிறுவனும், சிறுமியும் இரு முனைகளை பிடித்து சுழற்ற நடுவில் நின்றிருந்த சிறுமி உற்சாகமாக துள்ளி குதித்து ‘ஸ்கிப்பிங்’ ஆடினாள்.

சிறுவர், சிறுமிகளின் இந்த குறும்பு தனத்தை அங்கு நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


Next Story