மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப், லண்டன் புறப்பட்டார்


மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப், லண்டன் புறப்பட்டார்
x
தினத்தந்தி 19 Nov 2019 8:18 AM GMT (Updated: 19 Nov 2019 7:42 PM GMT)

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டு சென்றார்.

இஸ்லாமாபாத்,

‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடந்த ஆண்டு அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

அதனை தொடர்ந்து, லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து, உடனடியாக அவர் லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால் பாகிஸ்தானில் உள்ள அனைத்து மருத்துவ வசதிகளையும் பயன்படுத்தி நவாஸ் ஷெரீப்புக்கு சிகிச்சை அளித்துப் பார்த்துவிட்டதாகவும், வெளிநாட்டில் சிகிச்சை அளித்தால் மட்டுமே அவரது உடல் நிலை தேறும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதன் பேரில் நவாஸ் ஷெரீப், லண்டன் சென்று சிகிச்சை பெற பிரதமர் இம்ரான்கான் அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, கடந்த 10-ந்தேதி நவாஸ் ஷெரீப் லண்டன் புறப்பட்டு செல்வதாக இருந்தது.

ஆனால் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப்பின் பெயரை நீக்காததால் அவரது பயணம் ரத்தானது.

நவாஸ் ஷெரீப் லண்டன் செல்லவேண்டுமானால் ரூ.700 கோடிக்கான உறுதி மொழி பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை இம்ரான்கான் அரசு விதித்தது. அதனை ஏற்க மறுத்த நவாஸ் ஷெரீப் இது தொடர்பாக லாகூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் எந்தவித நிபந்தனையும் இன்றி நவாஸ் ஷெரீப்பின் பெயரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நீக்க அரசுக்கு உத்தரவிட்டனர். அதன்படி தடை பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப் பெயர் நீக்கப்பட்டு, அவர் லண்டன் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, நவாஸ் ஷெரீப் நேற்று லண்டனுக்கு புறப்பட்டு சென்றார். லாகூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து கார் மூலம் விமான நிலையம் சென்ற அவர், அங்கு தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் விமானத்தில் ஏறி லண்டன் சென்றார்.

அவருடன் அவரது சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் அவரது உடல் நிலையை கண்காணித்து வரும் மூத்த டாக்டர் அத்னன் கான் ஆகியோர் சென்றனர்.

முன்னதாக அதிகாலை முதலே நவாஸ் ஷெரீப்பின் வீட்டில் அவரது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். அவர்கள் விமான நிலையம் வரை வாகனங்களில் அணிவகுத்து சென்று நவாஸ் ஷெரீப்பை வழியனுப்பி வைத்தனர்.

இது குறித்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “நீண்டநேர பயணத்துக்கு நவாஸ் ஷெரீப்பின் உடல் நிலை ஒத்துழைக்காது என்பதால் கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் 2 மணி நேரம் தங்கி ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் லண்டன் புறப்பட்டு செல்வார்” என கூறினார்.

மேலும் அவர், “லண்டனில் முழு உடல் நிலை பரிசோதனை மற்றும் தீவிர சிகிச்சைக்கு பிறகு நவாஸ் ஷெரீப் அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு செல்வார். அங்கு மூத்த மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை வழங்கப்படும்” என்றார்.

இதற்கிடையே நவாஸ் ஷெரீப் விரைவாக குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும், இதன் மூலம் அவர் விரைவில் நாடு திரும்பி ஊழல் வழக்குகளை எதிர்கொள்வார் என்றும் பிரதமர் இம்ரான்கானின் ஆலோசகர் பிர்தஸ் ஆஷிக் அவான் தெரிவித்துள்ளார்.


Next Story