ஈராக் போராட்டகளத்தில் துப்பாக்கிச்சூடு - போலீஸ் அதிகாரிகள் உள்பட 25 பேர் பலி


ஈராக் போராட்டகளத்தில் துப்பாக்கிச்சூடு - போலீஸ் அதிகாரிகள் உள்பட 25 பேர் பலி
x
தினத்தந்தி 7 Dec 2019 9:51 PM GMT (Updated: 7 Dec 2019 9:51 PM GMT)

ஈராக் போராட்டகளத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில், போலீஸ் அதிகாரிகள் உள்பட 25 பேர் பலியாகினர்.

பாக்தாத்,

ஈராக்கில் அரசுக்கு எதிராக கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, விரிவான சீர்திருத்தம், சிறந்த பொது சேவை மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கோரி இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்கள் முன்வைத்தனர். அமைதியாக தொடங்கிய இந்த போராட்டத்தில் அவ்வப்போது சில கலவரங்களும் வெடித்தன. இதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இதையடுத்து அந்த நாட்டின் பிரதமர் அதெல் அப்துல் மஹதி கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் அங்கு போராட்டம் ஓய்ந்தபாடில்லை. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில், தலைநகர் பாக்தாத்தில் தாஹ்ரிர் சதுக்கத்துக்கு அருகே முகாம் அமைத்து போராடிய மக்கள் கூட்டத்திற்குள் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் புகுந்து திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். வெடிகுண்டுகளையும் வீசினர். இதனால் போராட்டகளம் யுத்த களம்போல் காட்சி அளித்தது. இந்த தாக்குதலில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 70 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஈராக் அதிகாரிகள் கூறுகையில், “ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரைத் தாக்குவதற்கும், பொது மற்றும் தனியார் சொத்து களை அழிப்பதற்கும் அமைதியான போராட்டங்களை சட்ட விரோதமானவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்றனர்.

Next Story