உலக செய்திகள்

உக்ரைன் விமான விபத்து: ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு; ஏவுகணை மூலம் தாக்கியதாக சொல்கிறது + "||" + US accuses Iran of Ukraine plane crash: Says attacked by missile

உக்ரைன் விமான விபத்து: ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு; ஏவுகணை மூலம் தாக்கியதாக சொல்கிறது

உக்ரைன் விமான விபத்து: ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு; ஏவுகணை மூலம் தாக்கியதாக சொல்கிறது
உக்ரைன் விமானத்தை ஈரான் ஏவுகணை மூலம் தாக்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.
வாஷிங்டன்,

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமான நிலையத்துக்கு அருகே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் சம்பவ இடத்திலே பலியாகினர்.


ஈராக்கில் அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று யூகங்கள் எழுந்தன. ஆனால் அதனை நிராகரித்த ஈரான் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்தாக கூறியது.

விமானம் நடுவானில் பறந்தபோது எந்திர கோளாறால் திடீரென தீப்பிடித்ததாகவும், அதனால் விமானத்தை மீண்டும் விமான நிலையத்துக்கு திருப்ப முயற்சித்தப்போது விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் விபத்து குறித்து விசாரணை நடத்தும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே சமயம் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை விமான உற்பத்தியாளரான போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்காவிடமோ வழங்க மாட்டோம் என ஈரான் கூறியது. இது விமான விபத்து தொடர்பான சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.

இந்த நிலையில் உக்ரைன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா மற்றும் கனடா குற்றம் சாட்டி உள்ளது.

ஈரான் ராணுவம், உக்ரைன் விமானத்தை வேறுநாட்டின் போர் விமானம் என தவறுதலாக எண்ணி ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தி இருக்கலாம் என அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் உக்ரைன் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தங்களுக்கு உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளது என்று கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பல்வேறு ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இது பற்றி அவர் கூறுகையில், “உக்ரைன் விமானத்தை ஏவுகணை மூலம் தாக்கி வீழ்த்தியது ஈரான் தான். இதற்காக ஆதாரம் கிடைத்துள்ளது. எங்கள் உளவுத் தகவல்கள் மட்டுமல்ல எங்கள் நேசநாடுகளின் உளவுத்தகவல்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் இதனை ஈரான் திட்டமிட்டு செய்ததாக நாங்கள் கூறவில்லை. சரியான புரிதல் இல்லாமல், தவறாக புரிந்து கொண்டு இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம்“ என கூறினார்.

ஆனால் அமெரிக்கா மற்றும் கனடாவின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ஈரான் இருநாடுகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து ஈரான் விமான போக்குவரத்துறை தலைவர் அலி அபேசாத் கூறியதாவது:-

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான தகவல்கள் அனைத்தும் ஈரானுக்கு எதிரான ஒரு உளவியல் போர். எங்களுக்கு தெளிவாகத் தெரிந்த விஷயம் என்னவென்றால், இந்த விமானம் ஏவுகணையால் தாக்கப்படவில்லை என்பதுதான். இவ்வாறு அவர் கூறினார்.


ஆசிரியரின் தேர்வுகள்...