சிரியா-துருக்கி படைகள் மோதலால் பதற்றம்; இரு தரப்பில் 19 வீரர்கள் பலி


சிரியா-துருக்கி படைகள் மோதலால் பதற்றம்; இரு தரப்பில் 19 வீரர்கள் பலி
x
தினத்தந்தி 3 Feb 2020 3:41 PM GMT (Updated: 3 Feb 2020 3:41 PM GMT)

சிரியா மற்றும் துருக்கி நாட்டு படைகளுக்கு இடையேயான மோதலில் 19 வீரர்கள் பலியாகி உள்ளனர்.

அங்காரா,

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்த பிறகு அங்குள்ள குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் குர்து போராளிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பலியாகினர்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதன் ஆதரவு படைகளும் களம் இறங்கியுள்ளன.  சிரிய அரச படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டு வருகிறது.  ரஷ்யா உதவியுடன் துருக்கி நாட்டு படைகளும் போரில் இறங்கி உள்ளன.

இதனிடையே, சிரியாவில் போராளிகள் பிடியில் உள்ள இத்லிப்பின் வடமேற்கு பகுதிக்கு துருக்கி நாட்டு ராணுவ வாகனம் சென்றது.  இதனை அடுத்து முன்னறிவிப்பின்றி சிரிய படைகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் துருக்கி ராணுவ வீரர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்.  இதனை அடுத்து சிரிய படைகள் மீது துருக்கி ராணுவத்தினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.  இந்த சம்பவத்தில் 13 சிரிய வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று இத்லிப்பில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என சிரிய நாட்டு ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

இரு அண்டை நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்படுவது மிக அரிய நிகழ்வாகும்.  இதனால் சிரியா மற்றும் துருக்கி நாடுகளிடையே பதற்றம் அதிகரித்து உள்ளது.  எங்களுடைய ராணுவ வீரர்கள் உயிரிழக்கும்பொழுது நாங்கள் அமைதியுடன் இருப்பது சாத்தியமில்லை என துருக்கி அதிபர் எர்டோகன் கூறியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

Next Story