கொரோனா வைரஸ் இருப்பதாக குறும்பு: நடுவானில் பீதியை கிளப்பிய பயணி


கொரோனா வைரஸ் இருப்பதாக குறும்பு: நடுவானில் பீதியை கிளப்பிய பயணி
x
தினத்தந்தி 5 Feb 2020 11:37 PM GMT (Updated: 5 Feb 2020 11:37 PM GMT)

கொரோனா வைரஸ் இருப்பதாக குறும்பு செய்து நடுவானில் பீதியை கிளப்பிய பயணியால், புறப்பட்ட இடத்துக்கே விமானம் மீண்டும் திரும்பியது.

டொரான்டோ,

சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் சர்வதேச அளவில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க விழிப்புடன் உள்ளன.

இந்த நிலையில் கனடாவின் டொரான்டோ நகரில் இருந்து, ஜமைக்கா நாட்டின் மோண்டேகே பே நகருக்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் 243 பயணிகள் இருந்தனர். 4 மணி நேர பயணத்தில் விமானம் பாதி தூரத்தை கடந்து, நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது 29 வயதான பயணி ஒருவர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து நின்றார்.

பின்னர் அவர், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கூறினார். இதனால் பயணிகள் மத்தியில் பீதி தொற்றிக்கொண்டது. விமான ஊழியர்கள் உடனடியாக அந்த வாலிபருக்கு முகக்கவசம் மற்றும் கையுறைகளை வழங்கி, விமானத்தின் பின் பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

அதனை தொடர்ந்து, விமானம் மீண்டும் டொரான்டோ நகருக்கு திருப்பப்பட்டது. அங்குள்ள விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் கொரோனா வைரஸ் இருப்பதாக கூறிய வாலிபரை தவிர மற்ற பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.

இதையடுத்து, அந்த வாலிபரை பரிசோதிப்பதற்காக மருத்துவ குழு விமானத்துக்குள் சென்றது. அப்போது அவர் தனக்கு வைரஸ் தொற்று இல்லை எனவும், பயணிகளிடம் குறும்பு (பிராங்க்) செய்ததாகவும் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் மற்றும் விமான ஊழியர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


Next Story