மோடி மிகப்பெரிய தவறு செய்து விட்டார் : பாக்.பிரதமர் இம்ரான் கான் சொல்கிறார்


மோடி மிகப்பெரிய தவறு செய்து விட்டார் : பாக்.பிரதமர் இம்ரான் கான் சொல்கிறார்
x
தினத்தந்தி 6 Feb 2020 3:03 AM GMT (Updated: 6 Feb 2020 3:03 AM GMT)

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து பிரதமர் மோடி மிகப்பெரிய தவறை செய்து விட்டார் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இஸ்லமபாத்,

பாகிஸ்தானில் ஆண்டு தோறும் பிப்ரவரி 5 ஆம் தேதி காஷ்மீர் ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வையொட்டி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபர்பாத்தில் உள்ள சட்டப்பேரவையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார். 

அப்போது இம்ரான் கான் பேசியதாவது :-  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்திய பிரதமர் மோடி மிகப்பெரிய தவறை செய்து விட்டார். இந்து தேசியவாதம் என்ற பூதம் குடுவையில் இருந்து வெளிவந்து விட்டது. அதை மீண்டும் உள்ளே கொண்டு செல்ல முடியாது. பாகிஸ்தானுக்கு எதிராக பேசி மக்களவை தேர்தலில் வென்றதால் மோடி இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

இது போன்ற தொடர் நடவடிக்கைகள் காஷ்மீருக்கு விடுதலையை பெற்று தரும். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால், இந்த விவகாரம் உலக நாடுகளின் கவனத்தை பெற்றிருக்காது.  7 முதல் 10 நாட்களில் பாகிஸ்தானை முடித்துவிடுவோம் என்று மோடி பேசுகிறார்.  சாதாரண மனிதர் கூட இப்படி பேச மாட்டார்.

 காஷ்மீர் விவகாரத்தில் இருந்து உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்ப இந்தியாவுக்கு எந்த வாய்ப்பையும் பாகிஸ்தான் வழங்காது. காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம் மூன்று முறை பேசியுள்ளேன்” என்றார். 

Next Story