பாகிஸ்தானில் காஷ்மீர் குறித்த பேச்சு: "தலையிட வேண்டாம்" துருக்கி ஜனாதிபதிபதிக்கு இந்தியா கண்டனம்


துருக்கி ஜனாதிபதி எர்டோகனைப்  வரவேற்ற இம்ரான் கான்- ராய்ட்டர்ஸ்
x
துருக்கி ஜனாதிபதி எர்டோகனைப் வரவேற்ற இம்ரான் கான்- ராய்ட்டர்ஸ்
தினத்தந்தி 15 Feb 2020 5:48 AM GMT (Updated: 15 Feb 2020 5:48 AM GMT)

பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டபோது ஜம்மு-காஷ்மீர் குறித்து துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் 2 நாள் பயணமாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கு அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்பின் போது, காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு தனது நாடு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து இருந்தார்.

ஜனாதிபதி எர்டோகன், கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைக் குறிப்பிட்டு  எங்கள் காஷ்மீர் சகோதர சகோதரிகள் பல தசாப்தங்களாக அசவுகரியங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், சமீபத்திய காலங்களில் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் இந்த துன்பங்கள் மிகவும் மோசமாகிவிட்டன.

இன்று, காஷ்மீர் பிரச்சினை உங்களுக்கு (பாகிஸ்தானியர்கள்) மற்றும் எங்களுக்கு  நெருக்கமாக உள்ளது. நீதி மற்றும் நியாயத்தின் அடிப்படையில் இத்தகைய தீர்வு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நலன்களுக்கும் உதவும். காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் துருக்கி நீதி, அமைதி மற்றும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து துணை நிற்கும் என கூறி இருந்தார்.

ஜம்மு-காஷ்மீர் குறித்த துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறி இருப்பதாவது:-

துருக்கியின் ஜம்மு-காஷ்மீர் பற்றிய அனைத்து கருத்துக்களையும்  நிராகரிக்கிறோம்.  இது இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் அழிக்க முடியாத பகுதியாகும்.

இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் . பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கும் அதன் பிராந்தியத்திற்கும் பயங்கரவாதத்தால் ஏற்பட்டு உள்ள  கடுமையான அச்சுறுத்தல் உள்ளிட்ட உண்மைகளைப் பற்றிய சரியான புரிதலை வளர்த்துக் கொள்ளவும் துருக்கி ஜனாதிபதிக்கு  நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம் என கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், ஜனாதிபதி எர்டோகன் காஷ்மீர் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் எழுப்பி உரையாற்றினார். ஐ.நாவில் அவர் கூறிய கருத்துக்களுக்கு பதிலளித்த இந்தியா, காஷ்மீர் பிரச்சினையில் துருக்கியின் அறிக்கை ஆழ்ந்த வருத்தம்  அளிக்கிறது. அது ஒரு உள் நாட்டு விஷயம் என்று கூறி  இருந்தது.

Next Story