சிரியா ராணுவ தாக்குதலில் துருக்கி வீரர்கள் 33 பேர் பலி


சிரியா ராணுவ தாக்குதலில் துருக்கி வீரர்கள் 33 பேர் பலி
x
தினத்தந்தி 28 Feb 2020 6:38 AM GMT (Updated: 28 Feb 2020 10:13 PM GMT)

இட்லிப் மாகாணத்தில் சிரிய ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 33 துருக்கி ராணுவ வீரர்கள் பலியாகினர்.

டமாஸ்கஸ்,

சிரியாவின் வடமேற்கில் உள்ள இத்லிப் மாகாணத்தில் துருக்கி ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களுக்கும், அந்த நாட்டு அரசு படையினருக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நடந்து வருகிறது. அரசு படைக்கு உதவியாக ர‌ஷிய ராணுவம் அங்கு தரைவழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்துகிறது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் நடந்து வரும் இந்த மோதலில் அரசு படைகளுக்கு பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. கிளர்ச்சியாளர்களின் வசம் இருந்த ஏராளமான நகரங்களை அரசு படைகள் மீட்டுள்ளன. இதில் துருக்கியின் கண்காணிப்புத் தளங்களும் அடங்கும். இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரிய படைகளுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது.

இந்த நிலையில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சிரிய ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் துருக்கி வீரர்கள் 33 பேர் பலியாகினர். இந்த தகவலை துருக்கி ஹெதே மாகாணத்தின் கவர்னர் ராமி டோகன் தெரிவித்தார்.

மேலும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த வீரர்கள் பலர் துருக்கி கொண்டு வரப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து, துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் தலைநகர் அங்காராவில் உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்தை நடத்தினார். சிரிய அரசு படைகளுக்கு எதிராக தரை மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்துவதற்காக துருக்கி ராணுவ மந்திரி ஹுலுசி அகார் மற்றும் மூத்த ராணுவ தளபதிகள் சிரிய எல்லைக்கு விரைந்தனர்.

அதனை தொடர்ந்து சிரியா ராணுவ நிலைகளை குறிவைத்து துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளது. இதன் காரணமாக சிரியாவில் பெரும் பதற்றம் நீடிக்கிறது.


Next Story