உலகம் முழுவதும் கொரோனா பலி 53 ஆயிரத்தை தாண்டியது; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது


உலகம் முழுவதும் கொரோனா பலி 53 ஆயிரத்தை தாண்டியது; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது
x
தினத்தந்தி 4 April 2020 12:15 AM GMT (Updated: 3 April 2020 11:42 PM GMT)

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது. பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியது.

வாஷிங்டன், 

சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் நோய்க்கிருமி பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாததால் செய்வது அறியாமல் உலக நாடுகள் திகைத்து நிற்கின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் நேற்று 10 லட்சத்தை தாண்டியது. இதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்தது.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ஈரான், இங்கிலாந்து நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இனி வரும் நாட்களில் அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து நாடுகளில் நிலைமை மேலும் மோசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2½ லட்சத்தையும், உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தையும் தாண்டியது. நேற்று ஒரு நாளில் மட்டும் 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

கொரோனாவை வைரசை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் அமெரிக்காவில் 1 லட்சம் முதல் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை பலியாக வாய்ப்பு இருப்பதாக ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை நிபுணர்கள் அச்சம் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் பேரழிவு மேலாண்மை அமைப்பு, உடல்களை கொண்டு செல்ல உதவும் 1 லட்சம் பைகளை தயாராக வைத்திருக்குமாறு அமெரிக்க ராணுவத்தை கேட்டுக்கொண்டு உள்ளது.

அமெரிக்காவில் மக்கள் தொகை மிகுந்த நியூயார்க் நகரில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் யாரும் முக கவசம் அணியாமல் வெளியே வரவேண்டாம் என்று நகர மேயர் பில் டி பிளாசியோ மக்களை கேட்டுக் கொண்டு உள்ளார்.

அமெரிக்காவில் மார்ச் மாதத்தின் கடைசி இரு வாரங்களில் மட்டும் 1 கோடி பேர் வேலை இழந்து இருக்கிறார்கள். வேலையில்லாதவர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான ஆவணங்களில் கடந்த வாரத்தில் மட்டும் 66 லட்சத்து 50 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வேலைவாய்ப்பு, முதலீடு, பணப்புழக்கம் குறைந்து பொருளாதாரம் 30 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடையும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலக பொருளாதாரத்தில் 308 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்றும், இது உலக அளவிலான உற்பத்தி மதிப்பில் 4 சதவீதம் என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி கூறி இருக்கிறது.

ஒரே நாளில் ஸ்பெயினில் 950-க்கும் மேற்பட்டோரும், இங்கிலாந்தில் 560-க்கும் மேற்பட்டோரும் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

உலகில் இதுவரை இந்த நோய்க்கிருமியால் இறந்தவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இத்தாலி, ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். கொரேனா பரவும் வேகம் இந்த நாடுகளில் சற்று குறைந்து இருக்கிறது. ஸ்பெயினில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் என்றும் அவர்களின் உடல் நலம் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த நாட்டின் சுகாதார துறை மந்திரி சல்வேடார் இலா தெரிவித்தார்.

அதே சமயத்தில் இளைஞர்கள் சிலரும், 6 வார குழந்தையும் உயிர் இழந்ததன் மூலம் கொரோனா அனைத்து வயதினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெளிவாகி இருப்பதாகவும் அவர் கூறினார்.

இங்கிலாந்தில் போதிய அளவில் மக்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் நோய் தொற்று பரிசோதனை நடத்தப்படவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டை பிரதமர் போரிஸ் ஜான்சன் மறுத்து உள்ளார். ஒரு வாரத்தில் மட்டும் 1 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும், தானும் பரிசோதனை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இங்கிலாந்தில் புதிதாக ஆஸ்பத்திரிகள் கட்டப்படுகின்றன.

கொரோனா பரவுவதை தடுக்க ரஷியாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,500-ஐ தாண்டி இருக்கிறது. ஊரடங்கின் காரணமாக வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த மாதம் இறுதி வரை சம்பளம் வழங்கப்படும் என்று அதிபர் புதின் அறிவித்து உள்ளார்.

தாய்லாந்து நாட்டில் நிலைமை மோசமாக தொடங்கியதால் நேற்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே வறுமை, வேலைவாய்ப்பு இன்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் கொரோனா பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நைஜீரியாவில் ஏற்பட்ட உள்நாட்டு கலகம் காரணமாக 18 லட்சம் பேர் பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்த முகாம்களில் போதிய சுகாதார வசதிகள் இல்லாததால், அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் காட்டுத்தீ போல் பரவி பலத்த உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார ஊழியர் அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.

Next Story