ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பாவிட்டால் பதிலடி கொடுக்கப்படும்; டிரம்ப் சூசகம்


ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பாவிட்டால் பதிலடி கொடுக்கப்படும்; டிரம்ப் சூசகம்
x
தினத்தந்தி 7 April 2020 3:12 AM GMT (Updated: 7 April 2020 3:12 AM GMT)

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பாவிட்டால் பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும், கொரோனா சிகிச்சைக்காக உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட மருத்துவ பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த மார்ச் 25 ஆம் தேதி தடை விதித்தது.  எனினும், மனித நேய அடிப்படையில் சில நாடுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது.

 இந்தியாவிடம் மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்கா ஆர்டர் செய்திருந்தது. மத்திய அரசின் தடையால் அந்த மாத்திரைகள் அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே ஆர்டர் செய்த அளவு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை அமெரிக்காவுக்கு அளிக்க வேண்டும் என்று டிரம்ப், மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். 

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப் கூறியதாவது;  பிரதமர் மோடியிடம் நேற்று பேசினேன். மிகவும் நல்ல உரையாடலாக அது அமைந்தது. ஆர்டர் செய்த மருந்துகளை நாங்கள் பெற அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும் என கூறினேன்.  ஒரு வேளை அவர் மருந்துகளை அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதி அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படலாம்” என்றார். 

இதற்கிடையே, 24 வகையான மருத்துவ பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்தியுள்ளது. 

Next Story