அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: போட்டியில் இருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ்


அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: போட்டியில் இருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ்
x
தினத்தந்தி 9 April 2020 8:20 PM GMT (Updated: 9 April 2020 8:20 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகுவதாக பெர்னி சாண்டர்ஸ் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு கொரோனா வைரசுக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாகி வரும் நிலையில், இந்த தேர்தல் நடைபெறுமா என்பதில் சந்தேகம் இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என ஜனாதிபதி டிரம்ப் அண்மையில் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஜனநாயக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடெனுக்கும், செனட்சபை எம்.பி. பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இவர்களில் பெர்னி சாண்டர்ஸ் கடந்த 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலேயே டிரம்புக்கு எதிராக களம் காண முயற்சித்தார். ஆனால் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனிடம் தோல்வியடைந்தார். எனவே இந்த முறை கண்டிப்பாக வேட்பாளராக இடம்பிடிப்பதற்கு அவர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். எனினும் இந்த முறையும் கட்சிக்குள் அவருக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லாமல் போனது.

இந்த நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகுவதாக பெர்னி சாண்டர்ஸ் நேற்று முன்தினம் அறிவித்தார். இதன் மூலம் டிரம்பை எதிர்த்து, ஜோ பிடென் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இதற்கான முறையான அறிவிப்பு ஆகஸ்டு மாதமே வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story