ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் கத்திக்குத்து; 5 பேர் படுகாயம் - தாக்குதல் நடத்தியவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்


ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் கத்திக்குத்து; 5 பேர் படுகாயம் - தாக்குதல் நடத்தியவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்
x
தினத்தந்தி 2 May 2020 12:22 AM GMT (Updated: 2 May 2020 12:22 AM GMT)

ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

சிட்னி, 

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பில்பாரா பிராந்தியத்தின் தெற்கு ஹெட்லாண்ட் நகரில் மிகப்பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. நேற்று காலை வணிக வளாகம் திறந்ததுமே ஏராளமான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக குவிந்தனர். அங்குள்ள கடைகள் அனைத்தும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தன.

அப்போது உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு வணிகவளாகத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த மக்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். ஒரு சிலர் கடைகளுக்கு உள்ளே சென்றும், மறைவான இடங்களுக்கு சென்றும் ஒளிந்து கொண்டனர். ஆனாலும் அந்த நபர் சற்றும் ஈவு இரக்கமின்றி தன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் குத்தினான். இதில் 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இதனிடையே தாக்குதல் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வணிக வளாகத்தை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட நபரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்த போலீசார், கத்தியை கீழே போட்டுவிட்டு சரணடைந்துவிடும்படி அவரை எச்சரித்தனர். ஆனால் அதற்கு செவிசாய்க்காத அந்த நபர், மாறாக போலீசாரை கத்தியால் குத்த முயற்சித்தார்.

இதையடுத்து போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதனை தொடர்ந்து, தாக்குதலில் படுகாயம் அடைந்த 5 பேரையும் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story