பாகிஸ்தான் விமான விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு


பாகிஸ்தான் விமான விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு
x
தினத்தந்தி 23 May 2020 11:15 PM GMT (Updated: 23 May 2020 9:24 PM GMT)

பாகிஸ்தான் விமான விபத்தில் பலியானோர் அனைவரும் விமானி பயணிகள்தான் என்பது தெரியவந்துள்ளது.

இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானின் லாகூர் நகரிலிருந்து 91 பயணிகள், 8 ஊழியர்கள் என மொத்தம் 99 பேருடன் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பி.ஐ.ஏ) நிறுவனத்தின் பிகே 8303 என்ற விமானம் கராச்சி நகருக்கு நேற்று முன்னதினம் புறப்பட்டது

விமானம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு தரையிறங்க சில நிமிடங்கள் இருந்தபோது விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

அதனை தொடர்ந்து, கராச்சி விமானநிலையத்துக்கு அருகே இருக்கும் மலிர் பகுதியுள்ள மாடல் காலனி குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்து நொறுங்கியதில் 25 வீடுகள் சேதமடைந்தன.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர்.

விமானம் விழுந்த குடியிருப்பு பகுதியில் மக்கள் அடர்த்தி அதிகம், தெருக்கள் குறுகலாக இருந்ததால் மீட்புப்பணிகளை தொடர்வதிலும், தீயை அணைப்பதிலும் பெரும் சிக்கல் நீடித்தது.

இந்த விபத்தில் 45 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்ததாலும், மீட்பு பணிகள் முழுமையாக முடிவடையாததாலும் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலியான அனைவரும் விமானி பயணிகள்தான் என்பதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் இந்த கோர விபத்தில் பஞ்சாப் வங்கி தலைவர் உள்பட பயணிகள் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து சிந்து மாகாண சுகாதாரத்துறை மந்திரி அஸ்ரா பெச்சுகோ கூறியதாவது:-

விமானத்தில் 32 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட மொத்தம் 99 பேர் இருந்தனர். இவர்களில் 2 ஆண்களை தவிர மற்ற 97 பேரும் இறந்துவிட்டனர். இந்த விமானம் விழுந்த குடியிருப்பு பகுதிகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவார்கள். வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஒரே வீட்டில் குழுமியிருந்த பலர் இந்த விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

விபத்து குறித்து விமானநிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில் “விமானத்தில் லேண்டிங் கியரில் பிரச்சினை இருந்ததாக விமானி கடைசியாக பேசும்போது தெரிவித்துள்ளார். இதைக்கூறிய சில வினாடிகளில் விமானம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து துண்டிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விபத்து குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை பாகிஸ்தான் அரசு அமைத்துள்ளது” என தெரிவித்தார்.

இதற்கிடையில் இந்த விபத்தில் இருந்து உயிர் தப்பி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் ஜூபைர் என்பவர் விபத்து பற்றி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விமானம் மிகவும் சீராக சென்று கொண்டிருந்தது. அது ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை அடைந்தபோது, விமானி ‘நாம் தரையிறங்குகிறோம், உங்கள் சீட் பெல்டுகளை கட்டுங்கள்’ என்று அறிவித்தார்.

நாங்கள் சீட் பெல்டுகளைக் கட்டினோம். தரையிறங்கும் சமயத்தில் விமானம் 3 முறை தடுமாறியது. பின்னர் விமானம் தூக்கி வீசப்பட்டதை போல் உணர்ந்தேன்.

அதன் பிறகு என்ன நடந்து என்பது எனக்கு தெரியவில்லை. கண் விழித்து பார்த்தபோது என்னை சுற்றிலும் கரும் புகை இருந்தது. நான் காயமடைந்திருந்தேன். சில நொடிகளில் சுயநினைவை இழந்தேன். மீண்டும் நான் கண்விழித்தபோது ஆஸ்பத்திரியில் இருந்தேன் என்று அவர் கூறினார்.

Next Story