வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: மெக்சிகோ முன்னாள் கவர்னர் கைது


வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: மெக்சிகோ முன்னாள் கவர்னர் கைது
x
தினத்தந்தி 9 July 2020 9:32 PM GMT (Updated: 9 July 2020 9:32 PM GMT)

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், மெக்சிகோ முன்னாள் கவர்னர் கைது செய்யப்பட்டார்.

மியாமி, 

மெக்சிகோ நாட்டில் 2010-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சிகுவாகுவா மாகாணத்தின் கவர்னராக பதவி வகித்தவர், சீசர் டுவர்டே.

இவர் ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர், வார இறுதி நாட்களில் நண்பர்களையும், குடும்பத்தினரையும் தனது பண்ணையில் பறக்க அரசு ஹெலிகாப்டரை பயன்படுத்தியவர்.

அங்கு கடும் வறட்சி நிலவியபோது, சிறிய அளவிலான பண்ணையாளர்களுக்கு உதவுவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பசுக்களை திருடியதாகவும் இவர் மீது புகார் எழுந்தது.

வருமானத்துக்கு மீறி பெருமளவில் சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.

மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மேனுவல் லோபஸ் ஓப்ராடோர், அமெரிக்கா சென்று அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசியபோது, சீசர் டுவர்டேயை கைது செய்ய உதவுமாறு வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது.

இநத நிலையில் சீசர் டுவர்டே, மியாமி நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மெக்சிகோவில் நிலுவையில் உள்ள ஊழல் வழக்கில் விசாரணையை சந்திக்கும் வகையில் விரைவில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன.

Next Story