ஹாங்காங் ஜனநாயக ஆர்வலர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை


ஹாங்காங் ஜனநாயக ஆர்வலர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Aug 2020 11:04 PM GMT (Updated: 1 Aug 2020 11:04 PM GMT)

மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள ஹாங்காங் ஜனநாயக ஆர்வலர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

ஹாங்காங்,

ஹாங்காங் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. ஹாங்காங் மீதான தனது பிடியை மேலும் இறுக்கும் வகையில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிரான ஜனநாயக சார்பு போராட்டத்தை நசுக்கும் வகையில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் சீனாவின் அடக்குமுறை காரணமாக ஹாங்காங்கில் இருந்து தப்பி மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள ஹாங்காங்கின் மூத்த ஜனநாயக ஆர்வலர்கள் 6 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கையில் ஹாங்காங் போலீசார் இறங்கியுள்ளனர்.

ஹாங்காங்கில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் பணியாற்றி வந்த சைமன் செங், அமெரிக்க குடியுரிமை பெற்ற சாமுவேல் சூ மற்றும் பிரபல ஜனநாயக ஆர்வலர்கள் நாதன் லா, ரே வாங், லாவ் ஹாங் மற்றும் வாய்னே சான் ஆகியோரை இலக்காக வைத்து ஹாங்காங் போலீசார் கைது நடவடிக்கையை முடுக்கி விட்டு உள்ளதாக சீன ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த ஹாங்காங் சட்டமன்ற தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்திவைத்து ஹாங்காங் நிர்வாகம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது.

கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹாங்காங் நிர்வாகம் கூறினாலும், தொற்றுநோயை ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தி ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சி இது என எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

Next Story