பிரேசில் அதிபரின் மூத்த மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி


பிரேசில் அதிபரின் மூத்த மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 27 Aug 2020 1:12 AM GMT (Updated: 27 Aug 2020 1:12 AM GMT)

மனைவி, 2-வது மகனை தொடர்ந்து பிரேசில் அதிபரின் மூத்த மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசிலியா,

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது. இருப்பினும் அந்த நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனாரோ முழுமையான ஊரடங்கு பிறப்பிப்பதிலும், முக கவசம் அணிவதிலும் நம்பிக்கையில்லாமல் இருந்து வந்தார்.

இதன் காரணமாக அவரும் கொரோனா பிடியில் சிக்கினார். அவரைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினரும் அடுத்தடுத்து கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி கொரோனா தொற்றுக்கு ஆளான அதிபர் ஜெயீர் போல்சனாரோ 20 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டார்.

அடுத்த சில நாட்களிலேயே அவரது மனைவி மிச்செல் போல்சனாரோவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் கடந்த வாரம் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் போல்சனாரோவின் 2-வது மகன் ஜெயீர் ரீனன் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரரும் போல்சனாரோவின் மூத்த மகனுமான பிளேவியா போல்சனாரோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசில் நாடாளுமன்ற செனட் சபையின் உறுப்பினரான பிளேவியா போல்சனாரோ இந்த தகவலை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் இருப்பினும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மூலம் வீட்டிலேயே சிகிச்சை பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story