அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்


அமெரிக்காவில்  கொரோனா  பரவல் புதிய உச்சம்
x
தினத்தந்தி 25 Oct 2020 12:48 AM GMT (Updated: 25 Oct 2020 12:48 AM GMT)

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

வாஷிங்டன், 

சீனாவில் தோன்றிய கொரோனா உயிர்க்கொல்லி வைரஸ், மற்ற எந்த நாடுகளையும் விட அமெரிக்க வல்லரசைத்தான் அதிகமாக தாக்கி வருகிறது. உலகிலேயே அதிகளவு பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா தொடர்கிறது. அங்கு கொரோனா வைரஸ் பரவல் நேற்று புதிய உச்சம் தொட்டது. ஒரே நாளில் புதிதாக 83 ஆயிரத்து 10 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி அதிகபட்சமாக அங்கு ஒரே நாளில் 76 ஆயிரத்து 842 பேருக்கு தொற்று ஏற்பட்டதே அதிகளவிலான பாதிப்பாக இருந்தது. இப்போது அதை விட கூடுதலாக 6 ஆயிரத்துக்கும் அதிகமான பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது புதிய உச்சமாக அமைந்துள்ளது. கடந்த வாரத்தில் அங்கு 4 லட்சத்து 41 ஆயிரத்து 541 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இது ஜூலை மாத இறுதியின் 7 நாள் பாதிப்பை விட அதிகம் என அமெரிக்காவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது அமெரிக்காவில் மொத்த தொற்று பாதிப்பு என்பது 87 லட்சத்தை எட்டி வருகிறது. கனெக்டிகட் மாகாணம் முதல் ராக்கி மவுண்டன் வெஸ்ட் வரையிலான மாகாணங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது என வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் சேருவதும் அதிகரித்து வருகிறது. நேற்று 41 ஆயிரத்து 485 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். கடந்த ஆகஸ்டு மாத கடைசிக்கு பின்னர் இதுதான் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். அதே நேரத்தில் ஏப்ரல், ஜூலை மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவு ஆகும்.

இதையொட்டி அமெரிக்க தலைமை அறுவை சிகிச்சை ஜெனரல் டாக்டர் ஜெரோம் ஆடம்ஸ் கூறுகையில், “ஆஸ்பத்திரியில் சேருகிற கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் சிறப்பான சிகிச்சை கவனிப்பால் பலி எண்ணிக்கை குறைவாக இருக்கிறது” என தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனம், வடக்கு அரைக்கோளத்தில் உள்ள நாடுகள் கொரோனாவை பொறுத்தமட்டில் கட்டுப்படுத்த வேண்டிய மிக முக்கிய கட்டத்தில் உள்ளன என எச்சரித்துள்ளது. இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது, “அடுத்த சில மாதங்கள் மிக கடினமானதாக இருக்கும். சில நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின்றன” என குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் கொரோனா பலி 2 லட்சத்து 29 ஆயிரத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில் மீண்டும் தொற்று பாதிப்பு அமெரிக்காவில் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஓட்டுப்பதிவு பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story