உலகை ஆதிக்கம் செலுத்த மூன்றாம் உலகப்போரை தூண்டும் சீனா..,ஜெர்மன் உளவுத்துறை நிபுணர் எச்சரிக்கை


உலகை ஆதிக்கம் செலுத்த மூன்றாம் உலகப்போரை தூண்டும் சீனா..,ஜெர்மன் உளவுத்துறை நிபுணர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 Oct 2020 12:06 PM GMT (Updated: 26 Oct 2020 12:06 PM GMT)

மூன்றாம் உலகப்போரின் போர்க்களமாக ஐரோப்பாவை சீனா பார்ப்பதாக ஜெர்மன் உளவுத்துறை நிபுணர் ஒருவர் எச்சரித்து உள்ளார்.

பெர்லின்

சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. சீனாவை முடக்க என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், சீனாவிற்கு எதிராக 8 நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார ரீதியாக சீனா உலக நாடுகளுக்கு கொடுக்கும் அழுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர இந்த 8 நாடுகள் முடிவு செய்துள்ளது. அதன்படி அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, சுவீடன், நார்வே ஆகிய நாடுகள் இதில் ஒன்று சேர்ந்து உள்ளது.

சீனாவிற்கு எதிராக இந்த 8 நாடுகளின் அரசியல்வாதிகள் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்கள்.அதன்படி முதலாவதாக உலக நாடுகளின் சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்குவது. சீனாவின் நிறுவனங்கள் பிற நாட்டு நிறுவனங்களை வாங்குவது, மோனோபோலி என்று சீனாவின் நிறுவனங்கள் தனித்து இயக்குவது ஆகியவற்றை எதிர்க்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது

உலகம் முழுவதையுமே சீனா தனது ஆதிக்கத்திற்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக ஜெர்மன் முன்னாள் உளவுத்துறைத்தலைவர் எச்சரிக்கும் நிலையில், மூன்றாம் உலகப்போரின் போர்க்களமாக ஐரோப்பாவை அது பார்ப்பதாக கருத்து எழுந்துள்ளது.

அதன் பின், சீனாவின் இராணுவம் அண்டை நாடுகளின் எல்லையில் அத்துமீறுவது, தென் சீன கடல் எல்லையில் அத்துமீறுவது ஆகிய செயல்களை தடுக்க வேண்டும் என்று இதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீனா தென் சீன கடல் எல்லை, தைவான் ஆகிய நாடுகள் மீது அத்துமீறி வருகிறது. இதை மொத்தமாக தடுக்க வேண்டும். சீனாவின் ஆதிக்கத்தை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜெர்மன் உளவுத்துறையின் முன்னாள் தலைவராக இருந்த ஹெகார்ட் ஷிண்ட்லர் சீனாவை வர்த்தக ரீதியாகசார்ந்திருப்பதை குறைக்குமாறு  ஜெர்மனியை வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகளை மீறும் சீனாவின் தொலைக்கட்டுப்பாட்டு நிறுவனமான ஹூவாயின் 5ஜி நெட்வொர்க்கை தடை செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். சீனா புத்திசாலித்தனமாக, அமைதியாக, ஆனால் தொடர்ச்சியாக காய் நகர்த்தி வருவதாகவும், ஆனால், ஐரோப்பா அதை கவனித்தது போலவே தெரியவில்லை என்றும் ஷிண்ட்லர் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே உலகத்தை சீனா தனது ஆதிக்கத்திற்குள் கொண்டுவர திட்டமிட்டுவருவது குறித்து உலக நிபுணர்கள் அறிக்கை ஒன்றில் எச்சரித்துள்ள நிலையில் ஷிண்ட்லரின் எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், அந்த அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான எமிலி டி லா ப்ரூயெர்
கூறும்போது, மூன்றாம் உலகப்போர் ஏற்படும்பட்சத்தில், ஐரோப்பாவைத்தான் அது போர் நடைபெறும் போர்க்களமாக பார்ப்பதாக தெரிவித்துள்ளார

மேலும், சீனா ஜெர்மனியை அந்த போரின் அச்சாணியாக பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.சீனாவால் ஜெர்மனியை வெல்லமுடியுமானால், அதனால் ஐரோப்பாவையும் வெல்ல முடியும், ஏன், உலகத்தையே வெல்லமுடியும் என எச்சரித்து உள்ளார் எமிலி.


Next Story