அமெரிக்காவில் பயங்கரம்; தேவாலயத்துக்குள் புகுந்து கத்தி குத்து; 2 பேர் பலி


அமெரிக்காவில் பயங்கரம்;  தேவாலயத்துக்குள் புகுந்து கத்தி குத்து; 2 பேர் பலி
x
தினத்தந்தி 23 Nov 2020 7:15 PM GMT (Updated: 23 Nov 2020 7:15 PM GMT)

அமெரிக்காவில் தேவாலயத்துக்குள் புகுந்து கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வாஷிங்டன், 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் நகரில் தேவாலயம் ஒன்று உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் மாலை வழக்கமான பிரார்த்தனைகள் முடிந்து தேவாலயம் காலியாக இருந்தது. அப்போது தேவாலயம் அமைந்துள்ள சாலையில் வாழ்ந்துவரும் வீடற்ற நபர்கள் சிலர் குளிரில் இருந்து தப்பிக்க தேவாலயத்துக்குள் சென்று அமர்ந்து கொண்டனர்.

இந்தநிலையில் மர்மநபர் ஒருவர் கையில் கத்தியுடன் தேவாலயத்துகுள் புகுந்தார். இதைப்பார்த்து தேவாலயத்துக்குள் இருந்த நபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன நடக்கிறது என அவர்கள் சுதாரிப்பதற்குள் அந்த மர்ம நபர் அவர்களை கத்தியால் சரமாரியாக குத்த தொடங்கினார்.

இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. தேவாலயத்துக்குள் இருந்த நபர்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்குமாக ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அந்த நபர் சற்றும் ஈவிரக்கமின்றி ஒவ்வொருவரையும் விரட்டிச் சென்று கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

அவர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இதற்கிடையில் இந்த தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதனைத் தொடர்ந்து போலீசார் தேவாலயம் அமைந்துள்ள பகுதியை ‘சீல்’ வைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

அதன் பின்னர் அவர்கள் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த நபர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு சான் ஜோஸ் நகரின் மேயர் சாம் லிக்கார்டோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த நபர்களின் குடும்பங்களோடு தனது எண்ணங்கள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்திய மர்ம நபர் யார்? இந்த தாக்குதலின் பின்னணி என்ன? என்பன உள்ளிட்ட தகவல்கள் தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணையை தொடங்கியுள்ள சான் ஜோஸ் நகர போலீசார் தப்பியோடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story