கொரோனா தடுப்பு மருந்துகளில் உலக தலைவர்கள் முதலீடு செய்ய வேண்டும்: உலக சுகாதார அமைப்பு தலைவர் வேண்டுகோள்


கொரோனா தடுப்பு மருந்துகளில் உலக தலைவர்கள் முதலீடு செய்ய வேண்டும்:  உலக சுகாதார அமைப்பு தலைவர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 4 Dec 2020 11:29 PM GMT (Updated: 4 Dec 2020 11:29 PM GMT)

உலக தலைவர்கள் கொரோனா தடுப்பு மருந்துகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் கேட்டு கொண்டுள்ளார்.

ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 6 கோடியே 54 லட்சத்து 8 ஆயிரத்து 787 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  15 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.  இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு பொது இயக்குனர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கொரோனா தொற்றை உலக நெருக்கடியாக குறிப்பிட்டு உள்ளார்.

அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், இந்த தொற்றுக்கு கிடைக்கும் தீர்வானது, உலக பொது பொருளாக கொண்டு சமமுடன் பகிரப்பட வேண்டும்.  அதற்கு பதிலாக தனிப்பட்ட நபருக்கான பொருட்களாக பயன்படுத்தப்பட கூடாது என கூறினார்.

உலக நாடுகளின் தலைவர்கள் இந்த தொற்றை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக கொரோனா தடுப்பு மருந்துகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் சமீப வாரங்களில் வரவேற்கத்தக்க முடிவுகள் காணப்படுகின்றன.  இவை சுரங்க முடிவில் காணப்படும் வெளிச்சம் போல் பிரகாசமுடன் உள்ளது.  தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை நாம் தொடங்க வேண்டும்.

கொரோனா தடுப்பு மருந்து தேவைகளுக்கான நெருக்கடியில், பணக்காரர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள், ஏழை மற்றும் விளிம்பு நிலையில் இருப்பவர்களை மிதிக்க கூடிய உலகை நாம் ஏற்க கூடாது என்று கூறியுள்ளார்.

கொரோனா தொற்றை போன்று அடுத்த தொற்று ஏற்படாமல் இருக்க, அதனை தடுக்கும் வகையில் தயார்படுத்தி கொள்ள உலக தலைவர்கள் முதலீடு செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Next Story