உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.79 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,
சீனாவில் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 218-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே உலகம் முழுவதையும் தனது பிடிக்குள் வைத்திருக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாரிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி விட்டன. தடுப்பூசிகளை தயாரித்து வரும் பல நாடுகள் அவற்றை இறுதிக்கட்ட சோதனைகளில் இருக்கும்போதே, அவசர தேவைக்கு பயன்படுத்தவும் தயாராகி வருகின்றன. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.79 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகில் கொரோனாவால் 6 கோடியே 79 லட்சத்து 34 ஆயிரத்து 939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 லட்சத்து 50 ஆயிரத்து 169 பேர் பலியாகி உள்ளனர். 4 கோடியே 70 லட்சத்து 07 ஆயிரத்து 284 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 19,377,486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 85 ஆயிரத்து 599 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 434 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.