புதிய கொரோனா வைரஸ் பிரான்சுக்கும் பரவியது


புதிய கொரோனா வைரஸ் பிரான்சுக்கும் பரவியது
x
தினத்தந்தி 26 Dec 2020 7:29 PM GMT (Updated: 26 Dec 2020 7:29 PM GMT)

புதிய கொரோனா வைரஸ், பிரான்ஸ் நாட்டுக்கும் பரவி விட்டது. லண்டனில் இருந்து பிரான்சுக்கு திரும்பிய ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பாரீஸ், 

கொரோனா வைரஸ், சீனாவில் கண்டுபிடித்து ஓராண்டாகி உள்ள சூழலில், புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் தோன்றி இருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. இந்த புதிய கொரோனா வைரஸ் வி.யு.ஐ. 202012/01 என அழைக்கப்படுகிறது. இது 70 சதவீதம் வேகமாக பரவுகிற தன்மையை கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் கடந்த அக்டோபரில் அங்கு தோன்றி, இந்த மாத மத்தியில் தனது கைவரிசையை தீவிரமாக காட்டத்தொடங்கி உள்ளது.

இதன் காரணமாக உலக நாடுகள் பலவும் இங்கிலாந்துடனான தொடர்பை தற்காலிகமாக துண்டித்துள்ளன. குறிப்பாக இங்கிலாந்து விமானங்களுக்கு உலகின் 12-க்கு மேற்பட்ட நாடுகள் தடை விதித்து இருக்கின்றன. இங்கிலாந்தில் தோன்றியுள்ள இந்த வைரஸ், டென்மார்க், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. அதே நேரத்தில் 8 ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு பதிவாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் உறுதி செய்தது. இது பல நாடுகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. 

லண்டனில் இருந்து கடந்த 19-ந் தேதி பிரான்சின் டூர்ஸ் நகரத்துக்கு திரும்பியுள்ள பிரான்ஸ் குடிமகன் ஒருவருக்கு இந்த புதிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 21-ந் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் இது தெரியவந்தது. தற்சமயம் அவருக்கு அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், அவர் நலமுடன் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் தேசிய ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இது புத்தாண்டுக்கு முந்தைய நாள் வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பிரான்சுக்கு பைசர்-பயோ என்டெக் நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசியின் முதல் தொகுப்பு, பெல்ஜியத்தில் இருந்து வந்து சேர்ந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இன்று செவ்ரான், டிஜோன் நகரங்களில் 2 இடங்களில் முதியோருக்கு முதலில் செலுத்தப்பட உள்ளது.


Next Story