புதிய கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: வெளிநாட்டினருக்கு ஜப்பான் தடை


புதிய கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி:  வெளிநாட்டினருக்கு ஜப்பான் தடை
x
தினத்தந்தி 27 Dec 2020 12:47 PM GMT (Updated: 27 Dec 2020 12:47 PM GMT)

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரசின் பாதிப்புகளை தவிர்க்க வெளிநாட்டினருக்கு ஜப்பான் தடை விதித்து உள்ளது.

டோக்கியோ,

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்புகள் அச்சுறுத்தலாக இருந்து வரும் சூழலில் இவற்றின் தீவிரம் பல நாடுகளில் குறைந்து வருகிறது.  இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக புதுவகையான கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது.

கடந்த வாரம் அந்நாட்டு பிரதமர் போரீஸ் ஜான்சன் இதுபற்றிய அறிவிப்பினை வெளியிட்டார்.  இந்த புதுவகை வைரசானது, முன்பிருந்த கொரோனா வைரசை விட மிக எளிதில் பரவுகிறது என தெரியவந்துள்ளது.  நாடு முழுவதும் மிக வேகமுடன் பரவி வருகிறது என்றும் அவர் கூறினார்.

இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கையாக இங்கிலாந்து நாட்டுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்து உள்ளது.  இந்தியாவில், வருகிற 31ந்தேதி வரை இங்கிலாந்து நாட்டுக்கு விமானங்கள் செல்ல தடை அமலில் உள்ளது.  இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரசின் பாதிப்புகளில் இருந்து தப்பிப்பதற்கான நடவடிக்கைகளை பல்வேறு நாடுகளும் எடுத்து வருகின்றன.

இந்நிலையில், இதன் பரவலை தவிர்க்க ஜப்பான் நாட்டில் ஜனவரி மாத இறுதி வரை வெளிநாட்டினர் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.  இந்த தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது.  கடந்த வெள்ளிக்கிழமை பிரிட்டனில் இருந்து ஜப்பான் திரும்பிய ஐந்து பேருக்கு, புதிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

டோக்கியோ நகரிலும் புதிய கொரோனா தொற்று சிலருக்கு உறுதியானது.  இதனையடுத்து, ஜப்பான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டு மக்கள் மற்றும் ஜப்பானில் வசித்து வரும் வெளிநாட்டினர் நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.  எனினும் ஜப்பானுக்கு புறப்படுவதற்கு 72 மணிநேரத்திற்கு முன், கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றுகளை உடன் வைத்திருக்க வேண்டும்.

இதேபோன்று ஜப்பானுக்கு வந்த பின்னர் அவர்கள் 2 வாரங்கள் வரை தனிமைப்படுத்தும் மையத்தில் வைக்கப்படுவார்கள் என ஜப்பான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story