ரஷியாவில் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி


ரஷியாவில் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி
x
தினத்தந்தி 12 Jan 2021 10:51 PM GMT (Updated: 12 Jan 2021 10:51 PM GMT)

ரஷியாவில் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்தில் பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலியாகினர்.

மாஸ்கோ,

ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள யூரல் பிராந்தியத்தில் யெகாடெரின்பக் என்ற நகரில் 9 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் திடீரென தீ பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த தளங்களுக்கு பரவியது.

அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

வீடுகளில் தீ பரவுவதை அறிந்து திடுக்கிட்டு எழுந்த அவர்கள் அங்கிருந்து அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

எனினும் சில வீடுகளில் தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதால் அங்கிருந்தவர்கள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

இதற்கிடையில் இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, வீடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டனர். அதன்படி சுமார் 90 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர்.

எனினும் இந்த விபத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலருக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன. தீ விபத்துக்கான காரணம் குறித்து அறிய விசாரணை நடத்தப்பட்டு வருக்கிறது.

Next Story