விவசாய முன்னேற்றங்களுக்கு வழிநடத்தும் திறன் படைத்தவை; வேளாண் சட்டங்களுக்கு சர்வதேச நிதியம் பாராட்டு


விவசாய முன்னேற்றங்களுக்கு வழிநடத்தும் திறன் படைத்தவை; வேளாண் சட்டங்களுக்கு சர்வதேச நிதியம் பாராட்டு
x
தினத்தந்தி 15 Jan 2021 9:44 PM GMT (Updated: 15 Jan 2021 10:55 PM GMT)

வேளாண் சட்டங்களுக்கு சர்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த சட்டங்கள், விவசாய சீர்திருத்தங்களுக்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திறனை கொண்டு இருக்கின்றன என அந்த அமைப்பு கூறி உள்ளது.

வாஷிங்டன்,

மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு, கடந்த செப்டம்பர் மாதம் சீர்திருத்தம் என்ற பெயரில் 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. அந்த சட்டங்கள் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை, இடைத்தரகர்கள் இன்றி எங்கும் விற்க வழிசெய்திருப்பதாகவும், புதிய தொழில் நுட்பங்களை கொண்டு வருவதாகவும், லாபத்தை அதிகரிப்பதாகவும் மத்திய அரசு கூறுகிறது.

ஆனால் இந்த சட்டங்கள் தங்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னால் செல்ல வைத்து விடும், சந்தை முறைக்கு முடிவு கட்டிவிடும், குறைந்தபட்ச ஆதரவு விலைமுறையை ஒழித்து விடும் என்று கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு தொடர்ந்து 2-வது மாதமாக போராடுகின்றனர்.

இந்த நிலையில் வேளாண் சட்டங்களை சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.) பாராட்டி இருக்கிறது.

இந்த அமைப்பின் தகவல் தொடர்பு இயக்குனர் ஜெர்ரி ரைஸ், வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, டெல்லியில் விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

புதிய வேளாண் சட்டங்கள், இடைத்தரகர்களின் பங்கைக் குறைத்து விடும். செயல்திறனை மேம்படுத்தும்.

இந்தியாவில் விவசாய சீர்திருத்தங்களுக்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிநிதிப்படுத்தும் திறன், வேளாண் சட்டங்களுக்கு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த நடவடிக்கை, விவசாயிகள் நேரடியாக விற்பனையாளர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளவும், இடைத்தரகர்களின் பங்கைக் குறைப்பதின் மூலமாக உபரியின் பெரும்பகுதியை தக்க வைக்கவும் உதவும். கிராமப்புற வளர்ச்சிக்கு ஆதரவாக அமையும்.

இருந்தாலும், இந்த புதிய முறைக்கு மாறுகிறபோது, மோசமான பாதிப்புக்கு ஆளாகிறவர்களை, சமூக பாதுகாப்பு அமைப்பு போதுமான அளவுக்கு பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமானது.

சீர்திருத்தங்களால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு வேலை வாய்ப்பு சந்தையில் இடம் அளிப்பதை உறுதி செய்வதின்மூலம், இதை செய்ய முடியும்.

இந்த சீர்திருத்தங்களின் வளர்ச்சி நன்மைகள், விமர்சன ரீதியாக அவை செயல்படுத்தும் செயல்திறன் மற்றும் நேரத்தை சேர்ந்தது. எனவே அந்த பிரச்சினைகள் மற்றும் சீர்திருத்தங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story