மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க டிரம்ப் மீதான பதவி நீக்க விசாரணையை தொடர நாடாளுமன்றம் ஒப்புதல்


மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க டிரம்ப் மீதான பதவி நீக்க விசாரணையை தொடர நாடாளுமன்றம் ஒப்புதல்
x
தினத்தந்தி 11 Feb 2021 12:27 AM GMT (Updated: 11 Feb 2021 12:27 AM GMT)

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கும் வகையில் அவர் மீதான பதவி நீக்க விசாரணையை தொடர நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் 2-வது முறையாக போட்டியிட்ட டிரம்ப் தோல்வியடைந்தார்.

ஆனால் அவர் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வந்தார். இந்த சூழலில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்குவதற்காக கடந்த மாதம் 6-ந் தேதி நாடாளுமன்ற கூட்டு கூட்டம் நடைபெற்றது.

அப்போது டிரம்பின் அழைப்பின் பேரில் நாடாளுமன்றம் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் திடீரென நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பலியாகினர்.

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாது

இதையடுத்து தனது ஆதரவாளர்களை தவறாக வழிநடத்தி வன்முறையை தூண்டியதாக கூறி டிரம்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியினர் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

டிரம்ப் பதவியிலிருந்து விலகிய பின்னரும், அவருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றி அவரை தகுதி நீக்கம் செய்ய ஜனநாயக கட்சி தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஏனெனில் அவரை தகுதி நீக்கம் செய்வதன் மூலம் இனி அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாமல் செய்ய முடியும். எனவே செனட் சபையில் டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் மீதான விசாரணையை தொடங்குவதற்கான முயற்சிகளை ஜனநாயக கட்சியினர் மேற்கொண்டனர்.

வாக்கெடுப்பில் ஆதரவு

அந்த வகையில் நேற்றுமுன்தினம் செனட் சபையில் ஜனநாயக கட்சியினர் டிரம்ப் கிளர்ச்சியை தூண்டியதாக குற்றம் சாட்டி, அவர் மீதான பதவி நீக்க விசாரணையை தொடங்க அழைப்பு விடுத்தனர்.

அப்போது ஜனநாயகக் கட்சியினர் ஜனவரி 6-ந் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்தின் சில காட்சிகளையும், அதற்கு முன்பாக டிரம்ப் தனது ஆதரவாளர்களை வன்முறைக்கு தூண்டும் விதமாக பேசிய வீடியோவையும் செனட் சபையில் காட்சிப்படுத்தினார்.‌

அதனைத் தொடர்ந்து டிரம்பின் சட்ட குழு டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின்னர் அவர் மீது பதவி நீக்க விசாரணை நடத்துவது அரசியலமைப்புக்கு எதிரானது என்று வாதிட்டனர்.ஆனால் அதனை நிராகரித்த செனட்சபை பதவி நீக்க குழு மேலாளர்கள் டிரம்ப் மீதான பதவி நீக்க விசாரணையை தொடரலாமா? என்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தினர்.

இதில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 50 உறுப்பினர்களும் விசாரணையை தொடருவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

செனட் சபை ஒப்புதல்

அதேபோல் டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் 6 பேரும் விசாரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.‌

இதன்மூலம் விசாரணைக்கு ஆதரவாக 56 பேர் வாக்களித்ததால் டிரம்ப் மீதான பதவி நீக்க விசாரணையை தொடருவதற்கு செனட் சபை ஒப்புதல் வழங்கியது. 

Next Story