கொரோனா பரவலை தடுக்க நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் மீண்டும் ஊரடங்கு


கொரோனா பரவலை தடுக்க நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் மீண்டும் ஊரடங்கு
x
தினத்தந்தி 27 Feb 2021 10:56 AM GMT (Updated: 27 Feb 2021 10:56 AM GMT)

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வெலிங்டன்,

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. 50 லட்சத்திற்கு அதிகமானோரை மக்கள் தொகையாக கொண்ட அந்நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 372 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 
நியூசிலாந்தில் அவ்வப்போது பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.    
இதற்கிடையில், அந்நாட்டின் மிகப்பெரிய நகரான ஆக்லாந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

அதேபோல், தெற்கு ஆக்லாந்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தை தொடர்புபடுத்தி மேலும் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. மேலும், வைரஸ் உறுதிசெய்யப்பட்ட நபர் ஒரு வாரமாக தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் விதிமுறை மீறியுள்ளார் என அந்நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆட்ரின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார். பள்ளிக்கூடங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்நகரத்திற்குள் நுழையவும், வெளியேறவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நியூசிலாந்து முழுவதும் 2-ம் நிலை கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story