கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியா, ஜப்பானுக்கு வழங்க இலங்கை சம்மதம் + "||" + Sri Lanka Reverses Course, Offers Strategic Deep-Sea Port To India, Japan
கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியா, ஜப்பானுக்கு வழங்க இலங்கை சம்மதம்
கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கன்டெய்னர் முனையம் அமைக்கும் ஒப்பந்தத்தை மீண்டும் இந்தியா, ஜப்பானுக்கு வழங்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.
கொழும்பு
கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கன்டெய்னர் முனையம் அமைக்க இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இலங்கை அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி, கன்டெய்னர் முனையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை இந்தியா, ஜப்பான் நாடுகள் செய்து வந்த நிலையில், சமீபத்தில் இந்த ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்தது. கொழும்பு துறைமுகத்தில் உள்ள தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்துள்ளதாக கூறப்பட்டது.
அதே சமயம், இந்த முனையத்தின் மறுபுறத்தில் கொழும்பு சர்வதேச கன்டெய்னர் முனையத்தை சீன நிறுவனம் அமைத்து வருகிறது. இதனால், சீனாவின் அழுத்தம் காரணமாக இருக்குமா? என்றும் சந்தேகிக்கப்பட்டது. எனினும், சர்வதேச உறுதிமொழிகளை இலங்கை அரசு கடைப்பிடிக்கும்படி இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தியது.
இந்நிலையில், கொழும்பு துறைமுக கிழக்கு கன்டெய்னர் முனையம் அமைக்கும் பணி இந்தியா, ஜப்பானுக்கு மட்டுமே வழங்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இத்தகவலை அந்நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளர் கேஹிலியா ராம்புக்வெல்லா உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘கிழக்கு கன்டெய்னர் முனைய பணியை இந்தியா, ஜப்பானுக்கு வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் 85 சதவீத பங்குகள் வழங்கப்படும்”என்றார்.
இந்தியா மற்றும் ஜப்பான் இந்த முனையத்தை எவ்வாறு இணைந்து கட்டுப்படுத்தும் அல்லது பிரித்துக்கொள்ளும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இலங்கையின் இந்த சமீபத்திய சலுகைக்கு கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் உடனடியாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. இலங்கையின் இந்த புதிய முன்மொழிவு தொடர்பாக ஜப்பானும் கருத்து தெரிவிக்கவில்லை.