சூரியனுக்கு எதிரே தோன்றும் பிரமாண்ட நிலவு; அமீரகத்தில் இன்று வானில் தெரிகிறது


சூரியனுக்கு எதிரே தோன்றும் பிரமாண்ட நிலவு; அமீரகத்தில் இன்று வானில் தெரிகிறது
x
தினத்தந்தி 27 April 2021 12:33 AM GMT (Updated: 27 April 2021 12:33 AM GMT)

சூரியனுக்கு எதிரே வரும் நிலவின் பிரமாண்ட தோற்றம் அமீரகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) வானில் தெரிகிறது.

பூமியை சுற்றி வரும் நிலவு

நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அமீரகத்தில் ‘பிங்க் சூப்பர் மூன்’ வானில் பிரமாண்டமாக காட்சியளிக்க உள்ளது. பொதுவாக பூமியை நிலவானது நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. பூமியில் இருந்து நீண்ட தொலைவுக்கு செல்லும் பாதை அபிஜீ என்றும், குறைந்த தொலைவில் வரும்போது பெரிஜீ என்றும் அதன் தொலைவானது அழைக்கப்படுகிறது.

பூமியில் இருந்து குறைந்த பட்சமாக பெரிஜீ சுற்றுப்பாதையில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சமாக அபிஜீ பாதையில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலவானது சுற்றிக் கொண்டுள்ளது.

பிரகாசமாக காணப்படும்

இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த நீள்வட்டப்பாதையில் பூமிக்கு மிக அருகில் நிலவானது வரும் போது வழக்கமாக நாம் பார்க்கும் நிலவைவிட 7 சதவீதம் பெரியதாகவும், 14 சதவீதம் அதிக ஒளியுடனும், பிரகாசமாகவும், தெளிவாகவும் காணப்படும். பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் இந்த அபூர்வ காட்சியை சூப்பர் மூன் அதாவது ‘‘சூப்பர் நிலவு’’ என்று அழைக்கிறோம்.

இன்று வானில் தெரிய இருக்கும் அரிய காட்சி ‘பிங்க் சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அமெரிக்காவில் வசித்த பூர்வகுடிமக்களே அந்த பெயரை சூட்டியுள்ளனர்.

இன்று காலை வானில் தெரிகிறது

அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் புளோக்ஸ் என்ற மலை உள்ளது. இந்த மலையில் ஏப்ரல் மாதத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் வைல்டு கிரவுண்ட் புளோக்ஸ் என்ற பூக்கள் பூக்கின்றன. எனவே இந்த பூக்கள் பூக்கும் காலத்தில் இந்த முழு நிலவு காட்சியளிப்பதால் இளஞ்சிவப்பு நிறத்தையே இந்த நிலவுக்கு பெயர் வைத்துள்ளனர். இதுவே சூப்பர் பிங்க் மூன் என்ற பெயரை இந்த முழு நிலவுக்கு சூட்ட காரணமாக அமைந்தது.

அமீரக நேரப்படி இன்று காலை 7.32 மணிக்கு சூரியனுக்கு எதிரே இந்த பிரமாண்ட நிலவு தோன்றும். இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த நிலவானது வானில் தோன்றும். இந்த சூப்பர் மூன் அமீரகத்தில் மீண்டும் அடுத்த மாதம் (மே) 26-ந் தேதி அன்று 2-வது முறையாக காட்சியளிக்க உள்ளது.


Next Story