வேலியே பயிரை மேய்ந்த கதை; பாகிஸ்தானில் உணவு விடுதி ஊழியரிடம் பணம் பறித்த போலீசார்


வேலியே பயிரை மேய்ந்த கதை; பாகிஸ்தானில் உணவு விடுதி ஊழியரிடம் பணம் பறித்த போலீசார்
x
தினத்தந்தி 4 May 2021 7:08 PM GMT (Updated: 4 May 2021 7:08 PM GMT)

பாகிஸ்தானில் சகோதரியை சந்திக்க சென்ற நபரிடம் இருந்து பணம் பறித்த 3 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் வசித்து வருபவர் ஆசாத் அமீன்.  உணவு விடுதியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.  கடந்த ஏப்ரல் 30ந்தேதி தனது சகோதரியை சந்திக்க எஸ்சாநாக்ரி பகுதிக்கு சென்றுள்ளார்.

சகோதரியை சந்தித்து விட்டு இரவில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்து உள்ளார்.  அவரை 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த போலீசார் வழிமறித்தனர்.  அமீனிடம் வாயை திறந்து நன்றாக ஊதும்படி சொல்லியுள்ளனர்.  பின்னர், ஆல்கஹால் வாடை வருகிறது என போலீசார் அவரிடம் கூறியுள்ளனர்.

அமீனை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற போலீசார் அவரிடம் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.  அமீனின் பர்சில் ரூ.11,500 இருந்துள்ளது.  அதனை எடுத்து கொண்டு சென்று போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதன்பின் கடந்த 2ந்தேதி தனது சகோதரி வீட்டுக்கு மீண்டும் அமீன் சென்றுள்ளார்.  இதில், சம்பவம் நடந்த அதே இடத்தில் 3 போலீசாரும் நின்றுள்ளனர்.  தனது நண்பர்கள் உதவியுடன் அவர்களை பிடித்த அமீன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதன்பின்னர் 3 போலீசாரும், அமீனின் வீட்டிற்கு சென்று மன்னிப்பு கோரியுள்ளனர்.  அவரிடம் பறித்த பணமும் திருப்பி கொடுக்கப்பட்டது.  வழக்கை வாபஸ் பெற கோரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

அமீன் மன்னித்து விட்டார் என்பதற்கான ஆவணம் ஒன்றை கொண்டு வரும்படி 3 போலீசாரிடமும் மூத்த அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.  போலீசார் மீது இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை.


Next Story