உலக செய்திகள்

பில்கேட்ஸ் தம்பதி விவாகரத்து; 27 ஆண்டுகள் மண வாழ்வு முடிவுக்கு வந்தது + "||" + Billgates couple divorced; 27 years of married life came to an end

பில்கேட்ஸ் தம்பதி விவாகரத்து; 27 ஆண்டுகள் மண வாழ்வு முடிவுக்கு வந்தது

பில்கேட்ஸ் தம்பதி விவாகரத்து; 27 ஆண்டுகள் மண வாழ்வு முடிவுக்கு வந்தது
பில்கேட்ஸ் தம்பதியர் விவாகரத்து செய்துகொள்வதாக முடிவு எடுத்து அறிவித்துள்ளனர். இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பில்கேட்ஸ் தம்பதியர்
உலகின் மிகப்பெரிய பணக்காரர், பில்கேட்ஸ் (வயது 65). மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர். இவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் (56). இவர்களுக்கு 1994-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ரோரி ஜான் கேட்ஸ், ஜெனிபர் கேதரின் கேட்ஸ், போப் அடில் கேட்ஸ் என 3 குழந்தைகள்.

மண வாழ்வுக்கு முடிவு
யார் கண் பட்டதோ தெரியவில்லை, பில்கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் தம்பதியரின் 27 ஆண்டு கால மண வாழ்வில் விரிசல் ஏற்பட்டு, அது முடிவுக்கு வந்துள்ளது.இந்த ஆண்டு நிலவரப்படி பில்கேட்ஸ் சொத்து மதிப்பு ரூ.9 லட்சத்து 74 ஆயிரத்து 250 கோடி ஆகும். ஆக, இந்த தம்பதியரின் விவாகரத்துக்கு பணம் ஒரு காரணம் அல்ல என்றே புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது.

டுவிட்டரில் அறிக்கை
விவாகரத்தின் பின்னணி என்ன என்பதையொட்டி இந்த தம்பதியர் டுவிட்டரில் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அது இதுதான்:-
எங்கள் உறவைப்பற்றிய ஒரு மிகப்பெரிய சிந்தனை மற்றும் நிறைய வேலைகளுக்குப் பின்னர் நாங்கள் எங்கள் திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவது என்ற முடிவை எடுத்துள்ளோம். கடந்த 27 ஆண்டுகளில், வியக்கத்தக்க 3 குழந்தைகளை வளர்த்து இருக்கிறோம். எல்லா மக்களும் ஆரோக்கியமானதொரு வாழ்க்கை வாழ்வதற்கு உலகமெங்கும் செயல்படும் ஒரு அறக்கட்டளை நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறோம். அந்தப்பணியில் நாங்கள் தொடர்ந்து நம்பிக்கை கொண்டு, சேர்ந்து பணியாற்றுவோம். ஆனால் எங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒரு தம்பதியராக இனி நாங்கள் ஒன்றாக 
வளர முடியும் என்று நம்பவில்லை. இந்த புதிய வாழ்க்கையை நாங்கள் தொடங்கும் வேளையில், எங்கள் குடும்பத்துக்கான இடத்தையும் அந்தரங்க உரிமையையும் நாங்கள் நாடுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உலகமெங்கும் இணைந்து வந்த இந்த பில்கேட்ஸ் தம்பதியரின் மண வாழ்வு முடிவுக்கு வந்திருப்பது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.