ஹாங்காங்கில் ஜனநாயக ஆர்வலர் ஜோசுவாவுக்கு 10 மாதம் சிறை


ஹாங்காங்கில் ஜனநாயக ஆர்வலர் ஜோசுவாவுக்கு 10 மாதம் சிறை
x
தினத்தந்தி 6 May 2021 11:13 PM GMT (Updated: 6 May 2021 11:13 PM GMT)

சீனாவில் பீஜிங் நகரத்தில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் 1989-ம் ஆண்டு, அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்தது.

இந்த அறவழிப்போராட்டத்தை சீனா, ராணுவத்தைக்கொண்டு ஒடுக்கியது. அதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் 1990-ல் இருந்து ஆண்டுதோறும் தியானன்மென் சதுக்க போராட்ட நினைவுநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனாவின் பெயரால் இந்தப் போராட்டம் சீன நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டது.

ஆனால் தடையை மீறி பல்லாயிரக்கணக்கானோர் குறிப்பாக ஜனநாயக ஆர்வலர்கள் கூடி இந்த நாளை அனுசரித்தனர். ஆனால் அவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்கு, ஜனநாயக ஆர்வலரான ஜோசுவா வோங் மற்றும் இளம் ஆர்வலர்கள் 3 பேர் மீதும் போடப்பட்டது. இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தபோது அவரும், இளம் ஆர்வலர்களான லெஸ்டர் சம், டிப்பனி யுயென், ஜானெல்லி லியுங் ஆகியோரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் குற்றவாளி என ஹாங்காங் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.ஜோசுவா வோங்குக்கு 10 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ், சட்டவிரோத கூடுகை வழக்கில் அவருக்கு முறையே 13.5 மாதம், 4 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார். இப்போது மேலும் 10 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அதையும் அவர் அனுபவித்தாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

லெஸ்டர் சம்முக்கு 6 மாதம், டிப்பனி யுயென், ஜானெல்லி லியுங் ஆகிய இருவருக்கும் தலா 4 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 


Next Story