விஜய் மல்லையா மீதான திவால் வழக்கு: இந்திய வங்கிகளின் கோரிக்கையை ஏற்ற லண்டன் ஐகோர்ட்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 May 2021 9:13 PM GMT (Updated: 18 May 2021 9:13 PM GMT)

லண்டன் ஐகோர்ட்டில் நடந்து வரும் திவால் வழக்கில் விஜய் மல்லையாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

லண்டன், 

இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்றார். அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச்சென்றார். இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் கைது செய்யப்பட்டார். உடனே ஜாமீனில் வெளிவந்த அவர், தொடர்ந்து ஜாமீனில் உள்ளார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது. லண்டன் ஐகோர்ட்டிலும் இந்த உத்தரவு உறுதி செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல அனுமதி கோரி அவர் தாக்கல் செய்த மனு, கடந்த ஆண்டு மே மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. எல்லா வாய்ப்புகளும் பறிபோன விஜய் மல்லையா, அரசியல் தஞ்சம் கேட்டு இங்கிலாந்து அரசிடம் விண்ணப்பித்துள்ளார். அந்த மனு நிலுவையில் இருப்பதால் அவர் இன்னும் நாடு கடத்தப்படவில்லை.

அதே சமயத்தில், விஜய் மல்லையாவை திவாலானவராக அறிவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, லண்டன் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. நேற்று இவ்வழக்கில் நீதிபதி மைக்கேல் பிரிக்ஸ், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட இந்திய வங்கிகளுக்கு ஆதரவாக உத்தரவிட்டார்.

இந்தியாவில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகள் விஷயத்தில், வங்கிகள் தங்களுக்கு சாதகமான நடவடிக்கையை எடுக்க அவர் அனுமதி அளித்தார். இதுதொடர்பாக திவால் மனுவில் திருத்தம் செய்ய ஒப்புதல் தெரிவித்தார். இந்த உத்தரவு, விஜய் மல்லையாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அதே சமயத்தில், தாங்கள் கொடுத்த கடனை திரும்பப்பெறும் முயற்சியில் வங்கிகளுக்கு ஏற்பட்ட முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. விஜய் மல்லையாவை திவாலானவராக அறிவிப்பது தொடர்பாக ஜூலை 26-ந் தேதி இறுதி விவாதம் நடக்கிறது.


Next Story