இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு ஜூன் 30-ந் தேதி வரை பயணிகள் விமானம் ரத்து: எமிரேட்ஸ் விமான நிறுவனம்


இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு ஜூன் 30-ந் தேதி வரை பயணிகள் விமானம் ரத்து: எமிரேட்ஸ் விமான நிறுவனம்
x
தினத்தந்தி 30 May 2021 8:47 PM GMT (Updated: 30 May 2021 8:47 PM GMT)

இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு அடுத்த மாதம் (ஜூன்) 30-ந் தேதி வரை பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல்

இந்தியாவில் கடந்த மாதம் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் உச்சத்தை தொட்டது. 2-வது அலை பரவிய காரணத்தால், கடந்த ஏப்ரல் 24-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து வருகை புரியும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அமீரக சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் தேசிய அவசரம், நெருக்கடி, பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை கூட்டாக அறிவித்தது.

இதில் ஏற்கனவே அறிவித்திருந்த 10 நாட்கள் தடையானது மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமீரக விமான நிறுவனங்கள் மற்றும் டிராவல் ஏஜென்சிகள் இணையதளத்தில் நடப்பு மே மாதம் அறிவித்தன. அதன்படி மே 5-ந் தேதி வரை இருந்த தடை அறிவிப்பு மீண்டும் 14-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

ஜூன் 30-ந் தேதி வரை...

இதனை தொடர்ந்து தற்போது 4-வது முறையாக இந்தியாவில் இருந்து வருகிற ஜூன் 30-ந் தேதி வரை அமீரகத்தின் எந்த பகுதிக்கும் பயணிகள் விமானங்கள் இயக்கப்படாது என நேற்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் குறையாததால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துபாய் எமிரேட்ஸ் நிறுவனத்தின் சார்பில், இந்தியாவில் இருந்து அமீரகம் வருவதற்கு முன்பதிவு செய்துள்ள தேதிகளை பயணிகள் மாற்றியமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story