பாலியல் தொல்லையால் பெண் அதிகாரி தற்கொலை: தென் கொரியா விமானப்படை‌ தளபதி ராஜினாமா


பாலியல் தொல்லையால் பெண் அதிகாரி தற்கொலை: தென் கொரியா விமானப்படை‌ தளபதி ராஜினாமா
x
தினத்தந்தி 4 Jun 2021 2:31 PM GMT (Updated: 4 Jun 2021 2:31 PM GMT)

தென்கொரிய விமானப்படையில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்த பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் தனது சக ஆண் அதிகாரியுடன் விருந்து நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அந்த ஆண் அதிகாரி அவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் அதிகாரி தனக்கு மேலுள்ள அதிகாரிகளிடம் புகார் அளித்தபோது, அவர்கள் இந்த விஷயத்தை மூடி மறைக்க முயற்சித்ததோடு, தவறாக நடந்து கொண்ட ஆண் அதிகாரியுடன் பேசி சமரசம் செய்து கொள்ளும்படி பெண் அதிகாரியை வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த அந்தப் பெண் அதிகாரி கடந்த மாத இறுதியில் தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் அங்கு பூதாகரமாக வெடித்தது.‌

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றும் அதனை மூடி மறைக்க முயற்சித்த விமானப்படை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்ட புகார் ஒன்று அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த அதிகாரியை ராணுவம் நேற்று முன்தினம் கைது செய்தது. மேலும் இந்த விவகாரத்தை விமானப்படை எப்படி கையாண்டது என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி ராணுவத்துக்கு அதிபர் மூன் ஜே இன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பெண் அதிகாரியின் சாவுக்கு முழு பொறுப்பு ஏற்பதாக கூறி விமானப் படையின் தளபதி லீ சியோங் யோங் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை அதிபர் மூன் ஜே ஏற்றுக் கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


Next Story