ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்து கலவையில் மாற்றம் செய்யப்படாது - தயாரிப்பு நிறுவனம்


ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்து கலவையில் மாற்றம் செய்யப்படாது - தயாரிப்பு நிறுவனம்
x
தினத்தந்தி 18 Jun 2021 11:58 PM GMT (Updated: 19 Jun 2021 1:35 AM GMT)

‘டெல்டா' வைரசை எதிர்கொள்ள ஏற்ற விதத்தில் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியில் மாற்றம் கொண்டு வரப்படுமா என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மாஸ்கோ,

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் முதன்முதலாக ‘பி.1.617.2’ என்ற உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரசுக்கு ‘டெல்டா' என்னும் பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியது. இந்த டெல்டா வைரசும் உருமாறி இருக்கிறது. இது ‘டெல்டா பிளஸ்' வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படுமா என்ற கேள்வி ஏற்கனவே எழுந்துள்ளது.

இந்த நிலையில் ரஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டு தயாராகி பிரபலமாகி உள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ‘டெல்டா' வகை வைரஸ்களை எதிர்கொள்ள ஏற்ற விதத்தில் அதன் மருந்து கலவையில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது பற்றி ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உருவாக்கிய ரஷியாவின் கமலேயா ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அலெக்சாண்டர் கிண்ட்ஸ்பர்க் கூறியதாவது:-

ஒரு புதிய தடுப்பூசியை உருவாக்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும். அறிவியல் வகையில் 10 நாட்களும், ஒழுங்குமுறை வகையில் 3 முதல் 4 மாதங்களும் எடுக்கும். அதற்குள் வைரஸ் உருமாறி விடும். புதிய வைரஸ் தோன்றும். எனவே இப்படி உருமாற்றம் நிகழ்கிற நிலையில், புதிய வகை வைரஸ்களுக்கு தடுப்பூசிகளை உருவாக்குவது சாத்தியமற்றது.

தற்போதுள்ள தடுப்பூசிகளுடன் நோய் எதிர்ப்பு சக்தியைப் பராமரிப்பது நல்லது. அப்படி நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறபோது, ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். எனவே ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்து கலவையில் மாற்றம் செய்யப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story