உலக அளவில் அன்னிய நேரடி முதலீட்டை பெற்ற நாடுகளில் இந்தியாவுக்கு 5-வது இடம்: ஐ.நா.


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Jun 2021 9:42 PM GMT (Updated: 21 Jun 2021 9:42 PM GMT)

உலக அளவில் அதிகமான அன்னிய நேரடி முதலீட்டை பெற்ற நாடுகளில் இந்தியா 5-வது இடம் பிடித்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

நியூயார்க், 

உலகளாவிய முதலீட்டு அறிக்கையை ஐ.நா. அமைப்பு நேற்று வெளியிட்டது. அதில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக உலக அளவில் அன்னிய நேரடி முதலீடு 35 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு 1.5 லட்சம் கோடி டாலராக இருந்த உலகளாவிய அன்னிய நேரடி முதலீடு 1 லட்சம் கோடி டாலராக குறைந்துள்ளது.

அதே சமயத்தில், இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு 27 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019-ம் ஆண்டு 51 பில்லியன் டாலராக (ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்து 400 கோடி) இருந்தது. இது, கடந்த ஆண்டில் 64 பில்லியன் டாலராக (ரூ.4 லட்சத்து 73 ஆயிரத்து 600 கோடி) உயர்ந்துள்ளது. தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப தொழில்களில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்ததே இதற்கு காரணம் ஆகும்.

உலக அளவில் அதிகமான அன்னிய நேரடி முதலீட்டை பெற்ற நாடுகளில் இந்தியா 5-வது இடம் பிடித்திருப்பதாகவும் அறிக்கையில் ஐ.நா. கூறியுள்ளது. கொரோனா 2-வது அலை, இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளை பெருமளவு பாதித்து இருப்பதாகவும், இருப்பினும் இந்தியாவின் வலிமையான அடித்தளம் நம்பிக்கை ஊட்டுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியன் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகள் வளர்ந்த நிலைக்கு மாறும் நாடுகள் அன்னிய முதலீட்டை ஈர்ப்பது மிகவும் மோசமாக தோல்வி அடைந்துள்ளன. ஐரோப்பிய யூனியன் 80 சதவீத அளவுக்கு வெளிநாட்டு முதலீட்டை 2020ஆம் ஆண்டு குறைவாகப் பெற்றுள்ளது. ஆசியப் பகுதி மட்டும் 4 சதவீதம் கூடுதலாக முதலீட்டை பெற்றுள்ளது.

Next Story