எல்லை பிரச்சினை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களை சீனா பின்பற்றவில்லை - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு


எல்லை பிரச்சினை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களை சீனா பின்பற்றவில்லை - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 July 2021 4:37 PM GMT (Updated: 10 July 2021 4:37 PM GMT)

பசிபிக் பிராந்தியத்தில் ரஷ்யாவும், இந்தியாவும் இணைந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ,

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யாவிற்கு 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் ஜெய்சங்கர் அங்குள்ள ஒரு ஆய்வு நிறுவத்தில் உரையாற்றிய போது, கடந்த சில வருடங்களாக எல்லை பிரச்சினை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களை சீனா பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டினார். கடந்த 45 வருடங்களாக இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் எந்த பிரச்சினையும் ஏற்படாத நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலால் அமைதி குலைந்துள்ளது என்று கூறினார்.

எல்லைப் பிரச்சினையை தீர்க்க கடந்த ஆண்டு மாஸ்கோவில் இந்தியா மற்றும் சீனா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 5 அம்ச தீர்வு ஒன்று இறுதி செய்யப்பட்டது என்றும் எல்லைப் பிரச்சினையை தவிர பல்வேறு இதர பிரச்சினைகளும் இந்தியா-சீனா இடையே நீடிப்பதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார். மேலும் பசிபிக் பிராந்தியத்தில் ரஷ்யாவும், இந்தியாவும் இணைந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Next Story