சவுதி அரேபியா செல்கிறார்; ஓமன் அதிபரின் பயணம் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும்: தூதர்


சவுதி அரேபியா செல்கிறார்; ஓமன் அதிபரின் பயணம் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும்: தூதர்
x

சவுதி அரேபியாவுக்கான ஓமன் நாட்டின் தூதர் சய்யித் பைசல் பின் துர்கி அல் சேட் கூறியதாவது:-

ஓமன் மன்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக் பின் சேட் அரசு முறைப் பயணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) சவுதி அரேபியா செல்கிறார். இந்த பயணத்தின் போது சவுதி அரேபிய மன்னரும், இரண்டு புனிதப் பள்ளிவாசல்களின் காப்பாளருமான சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்தை சந்தித்து பேசுகிறார்.

ஓமன் மற்றும் சவுதி அரேபியா இடையிலான தரைவழிப் பாதை பணியானது விரைவில் நிறைவடைய இருப்பதால் இந்த சந்திப்பில் இதுகுறித்து பேசப்படும். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் அதிகரிக்க உதவியாக இருக்கும்.கடந்த ஆண்டில் மட்டும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த 1,079 நிறுவனங்கள் ஓமன் நாட்டில் முதலீடு செய்துள்ளது. இதன் மதிப்பு 18 கோடியே 80 லட்சம் ஓமன் ரியாலுக்கும் அதிகமாகும். இந்த சந்திப்பின் மூலம் ஓமன் நாட்டில் மேலும் முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓமன் நாட்டில் இருந்து கடந்த ஆண்டு 4 கோடியே 93 லட்சத்து 20 ஆயிரம் ஓமன் ரியால் மதிப்புள்ள பொருட்கள் சவுதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் ஓமன் நாடு உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதில் 4.9 சதவீதம் அதிகம் ஆகும். எனவே இந்த பயணம் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story