ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வாபஸ் பெற்ற பின்பும் ஆதரவு வழங்குவோம்; அமெரிக்கா அறிவிப்பு


ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வாபஸ் பெற்ற பின்பும் ஆதரவு வழங்குவோம்; அமெரிக்கா அறிவிப்பு
x
தினத்தந்தி 16 July 2021 9:53 AM GMT (Updated: 16 July 2021 9:53 AM GMT)

ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வாபஸ் பெற்ற பின்பும் ஆதரவு வழங்குவோம் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.




தாஷ்கன்ட்,

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக ராணுவம் மற்றும் தலீபான் பயங்கரவாதிகள் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.  அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் ஆதரவாக இருந்து வந்தனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் முழு பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு அமெரிக்க படையினர் வெளியேறி வருகின்றனர்.  இந்த சூழலில், தலீபான்கள் நாட்டின் நிலப்பரப்புகளை கைப்பற்றி வருகின்றனர்.  அந்த நாட்டின் 421 மாவட்டங்களில் 3ல் ஒரு பகுதி தலீபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என கூறப்படுகிறது.

இதில் ஏராளமான மாவட்டங்கள் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஈரான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான எல்லை பகுதிகளாகும்.

இந்த நிலையில், உஸ்பெகிஸ்தான் நாட்டில் தாஷ்கண்ட் நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ஜல்மே கலீல்ஜத் பேசும்போது, ஆப்கானிஸ்தான் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.

படைகள் வாபஸ் பெறுவது ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது.  எனினும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்.  அவர்களுக்கு உதவியாக 330 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் அமெரிக்க அதிபர் நிதி ஒதுக்கியுள்ளார்.  

ஆப்கானிஸ்தானுக்கு பொருளாதார, தூதரக மற்றும் மனிதநேய அடிப்படையிலான உதவிகளை நாங்கள் வழங்குவோம் என கூறியுள்ளார்.  அமெரிக்க படைகள் ஆகஸ்டு மாத இறுதிக்குள் வாபஸ் பெறப்படும்.


Next Story