18 விலங்குகளின் ரத்த மாதிரிகளில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருள் எதில் உள்ளது? துபாய் மத்திய கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு


18 விலங்குகளின் ரத்த மாதிரிகளில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருள் எதில் உள்ளது? துபாய் மத்திய கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு
x
தினத்தந்தி 24 July 2021 12:05 AM GMT (Updated: 24 July 2021 12:05 AM GMT)

துபாய் மத்திய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்தின் சார்பில் 18 விலங்குகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருள் எதில் உள்ளது? என்ற ஆராய்ச்சி தொடங்கியுள்ளது.

இது குறித்து அந்த ஆய்வகத்தின் நுண்ணுயிரியல் நிபுணர் டாக்டர் உல்ரிச் வார்னெரி கூறியதாவது:-

நோய் எதிர்ப்பு பொருள்
நமது உடலில் நோய் தாக்கும்போது எதிர்ப்பு சக்தி காரணமாக ஆண்டிஜென் என்ற பொருள் உருவாகும். இந்த நோய் எதிர்ப்பு பொருள் ஆண்டிபாடி என்று அழைக்கப்படுகிறது. இந்த பொருள் ரத்தத்தில் நமது வாழ்நாள் முழுவதும் உடலிலேயே இருக்கும்.நம்மை ஒரு முறை தாக்கிய அதே வைரஸ் மீண்டும் நமது உடலுக்குள் நுழைய முடியாத வகையில் இந்த ஆண்டிபாடிகளே தற்காத்துக் கொள்ளும். ஒருமுறை அம்மை நோய் வந்துவிட்டால் மீண்டும் வராது என்பதற்கான அடிப்படை காரணம் இதுதான்.

ஆராய்ச்சி
இதுவே நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியாகும். ஆனால் சில வைரஸ் அல்லது பாக்டீரியாக்களுக்கு எதிரான ஆண்டிபாடி வாழ்நாள் முழுவதும் இல்லாமல் உடலில் அதன் அளவானது குறைந்து  கொண்டே வரும். கொரோனா வைரசுக்கான எதிர்ப்பு சக்தி உடலில் எத்தனை நாட்கள் இருக்கும் என்பது அறியப்படவில்லை.தற்போது விலங்குகளின் ரத்தத்தில் உள்ள ஆண்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு பொருளானது கொரோனா வைரசை எதிர்த்து போராடுமா? என்ற ஆராய்ச்சியானது துபாய் மத்திய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக சிங்கம், புலி, மான், ஆடு, ஒட்டகம், குதிரை, பூனை மற்றும் நாய் உள்ளிட்ட 18 வகையான விலங்கினங்களின் 500 ரத்தமாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக...
இதில் எந்த விலங்கின் ரத்தத்தில் உள்ள ஆண்டிபாடி அதாவது நோய் எதிர்ப்பு பொருள் கொரோனா வைரசை எதிர்த்து போராடுகிறது? அல்லது அதனை கட்டுப்படுத்துகிறது என்பது குறித்த ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை மனிதர்களை தாக்கும் சார்ஸ், கோவ்-2 ஆகிய வைரஸ்களை விலங்குகள் பரப்பும் என்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.தற்போது தொடங்கப்பட்டுள்ள ஆண்டிபாடி சோதனைகள் நிறைவடைய இன்னும் 14 நாட்கள் ஆகும். அதன்பிறகு கொரோனா வைரசுக்கு எதிராக விலங்குகளில் நோய் எதிர்ப்பு பொருள் எந்த மாதிரி செயல்படுகிறது? என்பது தெரியவரும். ஒருவேளை கொரோனா வைரசை கட்டுப்படுத்தினால் விலங்குகளின் ஆண்டிபாடி மனிதர்களின் உடலில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் மருந்து பொருளாக பயன்படுத்தப்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story