காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு


காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 21 Aug 2021 11:02 PM GMT (Updated: 21 Aug 2021 11:02 PM GMT)

காபூல் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

காபூலில் உள்ள விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுவதால் அந்த விமானநிலையத்திற்கு ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் குவிந்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் காபூல் விமான நிலையத்தை பயன்படுத்தி தங்கள் நாட்டு மக்களை மீட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்துள்ளதால் விமான நிலையத்தை சுற்றிலும் அமெரிக்க படையினர் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், நேற்று காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் விமான நிலையத்திற்குள் நுழைய முயற்சித்தனர். அப்போது, அந்த கூட்டத்தில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதில் கூட்டத்தின் முன்வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். மேலும், அதிக கூட்டம் இருந்ததால் பலரும் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். நீண்ட நேரமாக வெயிலில் அமர்ந்திருததால் சோர்வாக இருந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

காபூல் விமான நிலையத்தில் நிலைமை மோசமாக உள்ளதால் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் யாரும் காபூல் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. 

Next Story