காபூல் விமான நிலைய தாக்குதல்: பலி எண்ணிக்கை 175 ஆக உயர்வு


காபூல் விமான நிலைய தாக்குதல்: பலி எண்ணிக்கை 175 ஆக உயர்வு
x
தினத்தந்தி 28 Aug 2021 1:53 AM GMT (Updated: 28 Aug 2021 1:53 AM GMT)

காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதி நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது.

காபூல், 

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டில் இருந்து வரும் 31-ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேற உள்ளன. 

தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மீட்டு வருகின்றன. சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானியர்களையும் பல நாடுகள் மீட்டு வருகின்றன 

இந்த மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நடைபெறுகிறது. இதற்காக, காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன.

இதற்கிடையில், மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று முன் தினம் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர். 

காபூல் விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஹரசன் பிரிவு பயங்கரவாதியால் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 13 பேர் அமெரிக்க பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் ஆகும். எஞ்சியோர் ஆப்கானிஸ்தான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஆகும். 

Next Story