காசா நகரில் ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் தாக்குதல்


காசா நகரில் ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் தாக்குதல்
x
தினத்தந்தி 7 Sep 2021 4:49 PM GMT (Updated: 7 Sep 2021 4:49 PM GMT)

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது.‌ ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவுகிறது.

இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகிக்கும் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் ராணுவத்துடன் ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மே மாதம் இரு தரப்புக்கும் இடையில் தொடர்ந்து 11 நாட்களாக நடந்த கடுமையான சண்டையில் 250-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். சுமார் 3 ஆயிரம் பேர் வரை படுகாயம் அடைந்தனர். அதன் பின்னர் சர்வதேச நாடுகளின் அழுத்தத்தின் பேரில் இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன.

ஆனால் இந்த சண்டை நிறுத்தத்தை மீறி இருதரப்பும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை ஹமாஸ் போராளிகள் காசா நகரில் இருந்து இஸ்ரேல் நாட்டின் தெற்கு பகுதியை குறிவைத்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட பலூன்களை பறக்க விட்டனர். அந்த பலூன்கள் விழுந்து வெடித்து சிதறியதில் பல இடங்களில் தீப்பற்றி எரிந்தது. அதனை தொடர்ந்து இதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் நள்ளிரவு இஸ்ரேல் ராணுவம் காசா நகர் மீது வான்வழி தாக்குதலை நடத்தியது. ஹமாஸ் போராளிகள் குழுவின் ராணுவ வளாகம் மற்றும் ராக்கெட் உள்ளிட்ட ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி தகவல்கள் இல்லை.

Next Story