ஏவுகணை சோதனையில் மீண்டும் களமிறங்கிய வடகொரியா


ஏவுகணை சோதனையில் மீண்டும் களமிறங்கிய வடகொரியா
x
தினத்தந்தி 13 Sep 2021 1:35 AM GMT (Updated: 13 Sep 2021 1:35 AM GMT)

வடகொரியா இன்று தொலைதூர இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது.

பியங்யாங்,

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்கா மீதான மோதலை அதிகரிக்கும் வகையில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அணு ஆயுத வல்லமை கொண்ட வடகொரியா தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், புதிதாக உருவாக்கிய ஏவுகணையை வடகொரியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாக இந்த ஏவுகணை உள்ளது. 1,500 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியா சோதனை செய்த இந்த ஏவுகணை அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்டதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

கடந்த சில மாதங்களாக ஏவுகணை சோதனையில் ஈடுபடாத வடகொரியா தற்போது மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story