உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் 20 பேரை சுட்டுக்கொன்ற தலீபான்கள் + "||" + The Taliban killed 20 innocent civilians in Afghanistan

ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் 20 பேரை சுட்டுக்கொன்ற தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் 20 பேரை சுட்டுக்கொன்ற தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் 20 பேரை தலீபான்கள் சுட்டுக்கொன்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தலீபான்கள் வசமான ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தில் இருந்து தலீபான்கள் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் நாட்டை ஆக்கிரமிக்க கடந்த 20 ஆண்டுகளாக அரசு படைகளுடன் சண்டையிட்டு வந்தனர்.இந்த போரில் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்க படைகள் அண்மையில் அங்கிருந்து வெளியேற தொடங்கியதும் தலீபான்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர்.அந்த வகையில் கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் காபூலை அவர்கள் கைப்பற்றியதன் மூலம் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் அவர்கள் வசமானது.அதனைத் தொடர்ந்து 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்த தலீபான்கள், ஆப்கான் மக்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாகவும், அவர்களை‌ பழிவாங்கமாட்டோம் எனவும் உறுதி அளித்தனர்.

பஞ்ச்ஷீர் மாகாணத்தையும் தலீபான்கள் கைப்பற்றினர்
இதனிடையே நாட்டில் மொத்தமுள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்கள் தலீபான்களிடம் வீழ்ந்தபோதும், இந்துகுஷ் மலைத்தொடரின் அருகே அமைந்துள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் தலீபான்களால் கைப்பற்ற முடியாத சூழல் நிலவியது.அந்த மாகாணத்தை நிர்வகிக்கும் தேசிய கிளர்ச்சி படை தலீபான்களை எதிர்த்து போராடியது. ஆனால் எதிரிகள் வசம் இருந்த அந்த கடைசி மாகாணத்தையும் தலீபான்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.இதைத்தொடர்ந்து பஞ்ச்ஷீர் மாகாணத்தின் தேசிய கிளர்ச்சி படையை சேர்ந்த மூத்த தலைவர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடியதாக தலீபான்கள் அறிவித்தனர்.

அப்பாவி பொதுமக்கள் 20 பேர் சுட்டுக்கொலை
இந்த நிலையில் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தேசிய கிளர்ச்சி படைக்கு ஆதரவாக செயல்பட்ட அப்பாவி பொதுமக்களை தலீபான்கள் சிறை பிடித்து, கொலை செய்வதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.‌ இப்படி பஞ்ச்ஷீர் மாகாணத்தில் குறைந்தபட்சம் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பிரபல சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான காணொலி ஒன்றையும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.அந்த காணொலியில் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் உள்ள ஒரு சாலையில் ராணுவ உடை அணிந்த ஒரு நபரை சுற்றி தலீபான்கள் நிற்கிறார்கள். பின்னர் அங்கு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கிறது. ராணுவ உடை அணிந்த நபர் ரத்த வெள்ளத்தில் சரிகிறார். கொல்லப்பட்டவர் ராணுவத்தைச் சேர்ந்தவரா என தெளிவாக தெரியவில்லை. ஏனெனில் அந்த மாகாணத்தில் பொதுமக்கள் ராணுவ உடை அணிவது சாதாரணமானது.

உள்ளூர் வியாபாரியை சுட்டுக்கொன்ற தலீபான்கள்
இதனிடையே தேசிய கிளர்ச்சி படையை சேர்ந்தவர்களுக்கு சிம்கார்டு விற்பனை செய்ததாக கூறப்படும் அப்துல் சமிஎன்கிற உள்ளூர் வியாபாரியை தலீபான்கள் கைது செய்து சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.2 குழந்தைகளுக்கு தந்தையான அப்துல் சமி, “நான் ஒரு ஏழை வியாபாரி, எனக்கும், போருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என தலீபான்களிடம் கெஞ்சியதாக உள்ளூரைச் சேர்ந்தவர்கள் ஊடகத்திடம் தெரிவித்தனர்.‌தலீபான்களால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்ட சில நாட்களுக்கு பிறகு அவரது சடலம், அவரது வீட்டருகில் வீசப்பட்டதாகவும், அவரது உடலில், அவரை துன்புறுத்தியதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு மாதத்துக்குள் 153 ஊடகங்கள் மூடப்பட்டன‌
இதனிடையே தலீபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த ஒரு மாத காலத்துக்குள் ஆப்கானிஸ்தானின் 20 மாகாணங்களில் 153 ஊடகங்கள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மூடப்பட்ட ஊடகங்களில் வானொலி நிலையங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் ஆகியவை அடங்கும்.பொருளாதார பிரச்சினைகள் மற்றும் தலீபான்களின் கட்டுப்பாடுகளால் சம்பந்தப்பட்ட ஊடகங்கள் இந்த முடிவை எடுத்ததாக ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடகங்களை ஆதரிக்கும் அமைப்புகள் இதில் கவனம் செலுத்தவில்லை என்றால் நாட்டில் மீதமுள்ள ஊடகங்கள் மூடப்படுவதை நாம் விரைவில் காண்போம் எனவும் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஐ.நா. திட்டம்
ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்ட ஐ.நா. திட்டமிட்டு வருகிறது.
2. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் நடவடிக்கையை இந்தியாவும், அமெரிக்காவும் கண்காணித்து வருகின்றன - ஹர்ஷ் வர்தன் சிரிங்லா
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் என்ன செய்கிறது என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் கண்காணித்து வருவதாக ஹர்ஷ் வர்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார்.
3. ஆப்கானிஸ்தானில் சம உரிமை கோரி பெண்கள் போராட்டம்
காபூலில் அதிபர் மாளிகை அருகே பெண்கள் சிலர் சம உரிமை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக தலீபான்கள் ஆலோசனை
ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக தலீபான் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
5. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் மீட்பு; மத்திய அரசுக்கு கேரள முதல்-மந்திரி நன்றி
தலீபான்கள் கைவசப்படுத்தியுள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.